வருமான வரி விதிப்பை சீரமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வரும் 2017-நிதியாண்டின் அரை இறுதிக்குள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வருமான வரி விதிப்பால் மட்டும் அரசுக்கு கிடைக்கும் தொகை அந்நாட்டு அரசின் மொத்த வருமானத்தில் 45 சதவீதமாக உள்ளது. ஆனால், உலகிலேயே மக்கள்தொகையில் பெரியநாடான சீனாவில் இது 6.8 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இதைகருத்தில் கொண்டு நாட்டு மக்கள் மீதான வருமான வரி விதிப்பை சீரமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசுக்கு சொந்தமான பொருளாதாரம் தொடர்பான நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் 2017-நிதியாண்டின் முதல் அரையாண்டுக்குள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.உயர்வருவாய் பிரிவினருக்கு அதிகவரி விதிப்பதன் மூலம் வருமான சமநிலையின்மையை முடிவுக்கு கொண்டு வர இந்த நடவடிக்கை தேவையான ஒன்றாக உள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வருமான வரி சீரமைப்பு சட்டம் அமலுக்கு வந்தால், தற்போது நடைமுறையில் உள்ளதுபோல், சராசரியாக வரிகழிவுகளை அனுமதிக்காமல் கல்வி செலவினங்கள், கடனில் முதன்முறை வீடு வாங்குபவர்கள் செலுத்தும் தவணை தொகைக்கான வட்டி போன்ற முக்கிய அம்சங்களுக்கு மட்டும் இனி வரிகழிவு செய்ய அனுமதிக்கப்படும் என்று அரசின் நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.