சாம்சங் நிறுவன அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் ரெய்டு

325 0

201611231057044639_skorea-prosecutors-raid-samsung-group-offices_secvpfஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் தென்கொரிய அதிபரின் நெருங்கிய தோழியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘சாம்சங்’ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் அந்நாட்டு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து, கடந்த முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.

தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், தோழியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘சாம்சங்’ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் அந்நாட்டு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், அரசுக்கு சொந்தமான ஓய்வூதியத்துறை அலுவலகங்களிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையின் முன்னேற்றம் தொடர்பான எந்த தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. எனினும், சோதனைக்கு சென்ற அதிகாரிகள் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, பெட்டிகளில் வைத்து தூக்கிவந்த காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.