ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாளில் செய்யப்போவது என்ன? டிரம்ப் அறிவிப்பு

295 0

201611230510046865_trump-to-withdraw-from-trans-pacific-partnership-on-first_secvpfஅமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி ஒன்றில் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி ஒன்றில் அறிவித்துள்ளார்.

அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் ‘டி.பி.பி.’ என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம், கடந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள் முறைப்படி ஒப்புதல் வழங்கவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் 12 நாடுகளின் மந்திரிகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது உலக பொருளாதாரத்தில் 40 சதவீத பங்களிப்பு செய்யக்கூடியதாகும். இப்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் நடவடிக்கை, உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரும் என்பது டிரம்பின் நம்பிக்கை.

அதே நேரத்தில் ஒபாமா கேர் சுகாதார காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது பற்றியோ, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது பற்றியோ டிரம்ப் தனது முன்னுரிமைப்பட்டியலில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.