திருச்சியைச் சேர்ந்தவர் பிரசன்னா(22). இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படித்து வரும் இவரது நண்பர்கள் மதுரையைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(21), திகேஸ்(21), திருச்சியைச் சேர்ந்த கிரசன்(21), ஈரோட்டைச் சேர்ந்த எழுநந்தன்(21) ஆகியோர் சென்னைக்கு சென்றுவிட்டு நேற்று காலை காரில் சேலத்துக்கு வந்துகொண்டு இருந்தனர்.
சேலம் எருமாபாளையம் பைபாஸ் சாலையில் கார் வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில், 5 மாணவர்களும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போக்குவரத்து போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், விக்னேஸ்வரன், எழுநந்தன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசன்னா, திகேஸ், கிரசன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சேலம் போக்குவரத்து குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.