காலம் எழுதிய கறுப்பு மனிதர்கள்…. -சிவசக்தி.
அடித்துப் பொழியும் மழையாய்
நொடிக்குநொடி அவர்களின் நினைவு.
கையை அசைத்தபடியும்
கவலையற்று கலகலத்தபடியும்
நெஞ்சிற்குள் ஏந்திய நெருப்பை
ஊதிஊதி உருவேற்றியபடியும்
அருகிருந்த உன்னதங்கள்.
வெள்ளை முகில்களின் கூட்டம்
வேகமெடுத்து நகர்வதுபோல்
கொள்ளைச் சிரிப்போடு மண்ணில்
கூடி இருந்தவர்கள் அவர்கள்.
அள்ளிச் சொரிந்த அன்பும் அந்தக்
கள்ளமற்ற கனிவுச் சிரிப்பும்
காணமுடியாத் துயரில் எங்கள்
காலம் கரைகிறது நாளும்.
கறுப்பெனில் முகஞ் சுழித்த
காலத்தை மாற்றிய புதிய கரி
காலனின் கண்ணில் பிறப்பெடுத்த
ஞானிகள் என்னும் அவர்கள்
ஒற்றைப் பனைகளைப்போல்
உறுதி கொண்டு சென்று எங்கள்
ஊர்களை மீட்டவர்கள்.
கல்லில்கூட நாரை உரித்த
கரிகாலப் பிள்ளைகளைகளை
எல்லோரும் ஏற்றி தொழுதிடும்
வரலாற்றின் வல்ல நாளிது.
சொல்லில் வடித்திடாத் தூய
துறவிகளை துதிக்கும் நாளிது.
வல்லோரை வென்ற தம்வழி
வானத்துறைந்தவரை மன
ஆழவிருத்தி அகந்தொழுநாள்.
தாங்கும் விழுதுகளாய் தம்மை
தந்தோர் பலர் இருந்தும்
வீழவிடாதிருந்த வேர்களிவர்கள்.
தூங்கும் போதுமிந்த தூயமுகங்கள்
தொடர்ந்து வந்து துணையிருக்கும்.
பாங்கிகளாயிருந்து பாதிவழியதனில்
பற்றறுத்துப்போன பரம்பொருள்கள்.
நெடியவழிப் பயணத்தின் நடுவே
நெருடிய முட்களை எல்லாம்
அடியோடு அகற்றித் தங்கள்
முகங்களை மறைத்தும் கூடப்
புகழினை ஒறுத்தும் இந்தப்
புவியினில் நிலைத்தவர்கள்.
எண்ணங்களில் எல்லாம்
வண்ணங்கள் பூத்த பொழுதுகளில்
கண்ணீரில் கரையும் காலக்
கவிதைகளைப் போல அவர்கள்
கரைந்து போனவர்கள்.
அந்தக் காலம் எழுதிகளின்
கனவுகளைச் சுமந்தவர்கள்
சொந்தச் சுகம் மறந்து கொண்டு
வந்த நினைவுகளை வரிகளாக்கி
வரும்காலத் தலைமுறையின்
கையில் நம்பித் தருகின்றோம்.
நீலம்பூத்த வானில் இவர்கள்
நின்று சிரிப்பார்கள்.
காலை உடல்தழுவும் மென்
காற்றாய் உடனிருப்பார்.
நுரைகள் தள்ளிவரும் நீலக்
கடலின் நினைவுப் பாடல்களில்
நிலைத்து இவரிருப்பார்.
அறிவுபெருக்கிய புலம்பெயர்
அக்கினிக் குஞ்சுகளே
நெறிகொண்ட உங்களின்
நேரிய சிந்தனையில் தான்
நிமிரும் எங்கள்தேசம்.