தனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.

615 0

மனிதப் பேரவலத்தை எம்மினம் எதிர்கொண்டு இருந்த மிகவும் இறுக்கம் நிறைந்த காலப்பகுதி அது. இடங்கள் மிகக் குறுகி விட்டிருந்தன. கடலுக்குள் படகிறக்கி நடவடிக்கைப்பணியில் ஈடுபடுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருந்தது.

Omஆனாலும் மருத்துவப் பொருட்களின் தேவையென்பது அன்றைய சூழ்நிலையில் மிகவும் முதன்மையான ஒன்றாக இருந்தது. எத்தனை சவால்கள் இருந்தாலும் அதை எல்லாம் உடைத்தெறிந்து கடலிலே படகிறக்கி உயிர்விலைகளைக் கொடுத்து நடவடிக்கைப்பணியில் கடற்புலிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த நடவடிக்கைப்பணியில் மிகச்சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான் தமிழ்மாறன்.
கடல் அவனுக்கு மிகப்பிடித்தமான ஒன்று. அவனுக்கும் கடலுக்குமான உறவு என்பது சிறுபிள்ளையில் இருந்தே தொடங்கி விட்டது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மண்ணில் பிறந்து,திருமலையில் கடற்கரையோர கிராமத்தில் வாழ்ந்ததனால் கடல்தாய் மீதுஅளவு கடந்த அன்பு கொண்டிருந்தான். தன் பதின்ம வயதிலேயே கடல்தொழிலுக்கு செல்லத் தொடங்கியதால் கடலும் கடல்சார்ந்த அனுபவ முதிர்வும் அவனிடத்தில் நிறைவாகவே இருந்தது.

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? புறநீச்சலிடுவதில் அவனுக்குத் தனிவிருப்பம். நீரின் அடியால் நீந்தி கடலின் ஆழம் தொட்டுவருவது அவனுக்கு விளையாட்டு.வெள்ளிகள் பார்த்து திசை கணிப்பதிலும், தாவி வரும் அலைகளின் ஏற்ற இறக்க நீரோட்டம் பார்த்து, படகின் இயந்திரத்தை அதற்கேற்றால் போல் செலுத்துவதிலும்;,எந்த இறுக்கமான சூழ்நிலையிலும் நிதானமாய்ப் படகின் இயந்திரங்களைச் சீர் செய்வதிலும் அவன் கைதேர்ந்தவன்.

கடலில் ஏற்படும் சீரற்ற காலநிலைகளால் கடல் தன் நிலைமாறி பெரும் குழப்பத்தோடு இருக்கும் பொழுதுகளில் கூட கடல் பற்றிய அச்சம் அவனை ஒருதுளிகூட அண்டியதில்லை. மடக்கு அலைகளுக்குள்ளும் பக்குவமாய்ப் படகிறக்கி தனிஒருவனாய் படகோடு சென்று ஆழ்கடல் நடவடிக்கைப் பணியை மிகஇலகுவாக செய்துமுடித்துவிட்டு தளம் திரும்பும் அவன் திறன் பார்ப்பதற்கே பெரும் வியப்பாக இருக்கும்.
ஓய்வு என்பதை விரும்பாத உழைப்பாளி அவன்.எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருப்பது அவனின் குணம்.அமைதியாய் ஓர் இடத்தில் அவன் இருப்பதைப் பார்த்திருக்க முடியாது.ஓயாமல் ஓடிக்கொண்டே இருப்பதாலோ என்னவோ அவனால் பசியை மட்டும் கட்டுப்படுத்த முடியாது.அடிக்கடி சமையல் கூடத்துக்குச் சென்று எதையாவது கொறித்துக் கொண்டிருப்பான்.

நடவடிக்கைப்பணியில் நிற்கும் போராளிகளுக்கு வரும் நொறுக்குத் தீனிகளின் கணக்கு ஒருபோதும் சரியாக இருப்பதில்லை. ஒன்று இரண்டல்ல நிறையவே குறைந்திருக்கும்.யார் அதை எடுத்திருப்பார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.ஆனால் அதை எப்படி மறைத்து வைக்கிறான் என்பதுதான் எவருக்கும் புரியாமல் இருந்தது.

“யாருக்காவது பசி என்றாலோ இல்லை ஏதாவது சாப்பிட வேண்டும்போல இருக்கு|”என்று சொன்னால் காணும் கொஞ்ச நேரத்தில் அவன் சாப்பிட எதையாவது கொண்டு வந்து நீட்டுவான்.அவனது களஞ்சியத்தை கண்டு பிடிக்கவேண்டும் என்பது நண்பர்களின் நீண்ட நாள் திட்டம்.

ஒருநாள் நள்ளிராக்கடந்த பொழுது கடலுக்குப் போய்விட்டு வந்த தமிழ்மாறனுக்கு சரியான பசி. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் சரிவரவில்லை. எழுந்து ஒரு மரத்தடிக்குச் சென்று மணலைக் கிளறிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தபோது பெரிய ~கொள்கலன்| ஒன்றை வெளியில் எடுத்தான். அதற்குள் இருந்து ஒருபையை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நண்பர்கள் அதனை கண்டுவிட்டார்கள். அவன் அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் அவனது வைப்பகத்தை கண்டுபிடித்த திருப்தி நண்பர்களுக்கு. ஆனால் அன்றே அந்த வைப்பகம் வேறு இடம் மாறிக் கொண்டது யாருக்கும் தெரியாது.இப்படிச் சின்னச்சின்னதாய் அவன் செய்யும் குறும்புத்தனங்கள் அனைவரையும் மகிழவைக்கும்.
தமிழ்மாறன் 2005ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்தான். அடிப்படை ஆயுதப் பயிற்சிகளையும்,நவீன தொழில்நுட்ப தொலைத் தொடர்பு கருவிகள் பற்றிய கற்றலையும் தவிர வேறு எதையும் கற்றுக்கொள்ளும் தேவை அவனுக்கு இருக்கவில்லை.

கடலில் நீண்ட அனுபவம் மிக்க போராளிக்கு இருக்கும் செயல்திறன் அவனிடம் நிறைவாகவே இருந்தது. எந்தவேலையைக் கொடுத்தாலும் அதைப் புரிந்து கொள்ளும் திறனும், அதைமிகத் திறமையாகச் செய்து முடிக்கும் பக்குவம் நிறைந்த ஆளுமையும் அவனிடம் அதிகமாகவே இருந்தது.

மிகக் குறுகிய காலத்துக்குள் திருமலை மண்ணில் இருந்து பொத்துவில்,அம்பாறை என போராளிகளுக்குத் தேவையான நடவடிக்கைப் பணியை சிறிய படகில் தனியாளாகவே மிக நேர்த்தியாக செய்யத்தொடங்கினான்.

திருமலைக் கடற்பரப்பும் அதை அண்டிய இடங்களும் அவனுக்கு மிகவும் பரீட்சையமானதாக இருந்ததமையும், நீச்சலிலே அவனுக்கிருந்த மிகச் சிறந்த தேர்ச்சியும் விரைவிலேயே அவனிடம் கடல் வேவு நடவடிக்கைப் பணியும் வழங்கப்பட்டது. அவனது வேவுத் தகவல்கள் சம்பூர்,மூதூர்,என கடற்படையின் சிறிய தளங்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்கு வழிசமைத்துக் கொடுத்திருந்தது. திருமலைத்துறைமுகம் மீதான வேவுப்பணியிலும் அவன் ஈடுபட்டிருந்தான்.
அப்போதே தான் ஒரு கரும்புலியாகச் செல்லவேண்டும் என்ற ஆசை அவனுக்குள் துளிர்க்கத் தொடங்கியது.அதுவே நாளாக நாளாக பெரும் கனவாக அவன் மனதில் இடம் பிடித்துக் கொண்டது.தேசியத்தலைவரை நேரில் பார்க்கவேண்டும் என்பது அவனுக்குள் பெரும் இலட்சியமாகவே இருந்தது.அந்த நாளுக்காக அவன் காத்திருந்தான்.
திருமலை மண் மெல்லமெல்ல சிறிலங்காப்படைகளின் வல்வளைப்புக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது.இந்தநிலையில் தென்தமிழீழத்தில் இருந்து

வன்னிப்பெருநிலப்பரப்புக்கு அணிகள் பின்னகர்த்த வேண்டிய உடனத் தேவை எழுந்தது. இதில் முதல்கட்டமாக கடற்புலிகளின் கடற்தாக்குதல் தளபதிகளில் ஒரவரான சிறிராமோடு ஒரு அணிநகரத் தொடங்குகின்றது. அந்த அணியில் தமிழ்மாறனும் ஒருவனாக இருந்தான்.

கடற்புலிகளின் ஆண் பெண் போராளிகளைக் கொண்ட ஒருசிறிய அணியோடு, கடல் அனுபவம் இல்லாத படையணியைச்சேர்ந்த 100 பெண்போராளிகளுமாக காட்டு வழியே நகரத் தொடங்கு கின்றனர்.

காட்டுவழிப் பயணம் என்பது இலகுவான ஒன்றல்ல.ஏற்கனவே எதிரி விழிப்பாகி கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி இருந்தான். கூடவே மழைகாலமும் தொடங்கி விட்டிருந்தது. இந்த நகர்வென்பது ஒரிரு நாள்களில் முடிந்துவிடும் பயணமும் அல்ல. நாமும் நடக்கநடக்க தானும் சேர்ந்து நடப்பதுபோல் நீண்டு விரிந்து கொண்டே செல்லும் கானகம். பொதுவாகவே வெளிச்சம் படுவது அரிதாக இருக்கும் அந்தக் கானகத்தே கார்கால இருளும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா?

இடையே ஆறு கடக்க வேண்டும். மழைகொட்டிக் கொண்டு இருந்ததால் ஆற்று வெள்ளம் மடைதிறந்தால்போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. நீச்சல் தெரிந்தவர்களால்கூட அந்த வேகத்துக்குத் தாக்குப்பிடித்து எதிர் நீச்சல் போடுவது மிகக் கடினமானது. அப்படியிருக்க நீச்சலே தெரியாத பிள்ளைகளால் அந்த ஆற்றைக் கடப்பது என்பது மிகவும் ஆபத்தானது.

அந்தப் போராளிகளை பக்குவமாக அழைத்துச் செல்லும் பொறுப்பு கடற்புலிகளின் கைகளில் இருந்தது.ஆற்றைக் கடக்க கயிறு கட்டி எல்லாப் போராளிகளையும் அவர்களது ஆயுத தளபாடங்களையும் நகர்த்தினார்கள். இந்தப் பணியில் தமிழ்மாறனின் பங்கு என்பது உண்மையிலே வியத்தகு ஒன்றாக இருந்தது.

இடையிடேயே கொட்டித்தீர்க்கும் கனமழை. நிலமெங்கும் சேறும் சகதியும் வெள்ளமும் நிறைந்து கிடக்க, புதிதாய்ப் பாதைபிரித்து அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள.; வழமையாக காட்டுவழியாகப் பயணிக்கும் போது இடைஇடையிடையே தங்கி ஓய்வெடுத்துப்போகும் இடங்களேல்லாம் சிறிலங்காப் படைகளின் பலத்த கண்காணிப்பு வலயமாக மாறியிருந்தது.

கொட்டும் மழைக்குப் பாதுகாப்பாய் “பொலித்தீன், பைகளால் பத்திரப்படுத்தப்பட்ட துப்பாக்கிகள். முதுகு சுமக்கும் உடைமைப்பைகள். கூடவே உடலைத் துளைக்கும் குளிரும் பசியும் ஒருபுறம். நடந்து நடந்து ஓய்வைத்தேடிச் சோர்ந்து போயிருந்தன கால்கள். ஆனாலும் நின்று காலாற இடமில்லை.

மரங்களில் ஏறியிருந்து இரவைக் கழித்தும், சேறு சகதிக்குள் காலாறியும்,எதிரியோடு மட்டுமல்ல ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகள்,ஊர்வனவோடும் போட்டிபோட்டு பெரும் சவால்களைக் கடந்து நகர்ந்து முடிந்த அந்தப் பயணத்தில் ஒருவருக்குக் கூட எந்தத் தீங்கும் ஏற்படாதபடி அழைத்து வந்த பெருமை தமிழ்மாறனையும் சாரும்.
வன்னி மண்ணில் கால்பதித்திருந்த தமிழ்மாறன் தன் செயலாழுமையால் மிக குறுகிய காலத்துக்குள்ளே கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நம்பிக்கைக்குரியவனாக வளர்ந்திருந்தான்.தனித்து 1500 கடல் மைல்களுக்கு அப்பால் சென்று ஆழ்கடல் நடவடிக்கைப்பணிகளில் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கினான்.சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் முடிவெடுத்து காய்களை நகர்த்துவதில் வல்லமை மிக்கவனாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டான்.

பூநகரி,மன்னார்,ஆழ்கடல் என அவனது நடவடிக்கைகள் நீண்டு விரிந்தன.விடுதலைப் போராட்டத்துக்குத் தேவையான வளத்தை கடலோடி கொண்டு வந்து சேர்ப்பதில் தனியாளாக அவன் சாதித்தவை ஏராளம். விடுதலைப் பயிரையும்,அந்த பயிர் வளர்த்த நிலத்தையும் பன்னாடுகள் சேர்ந்து அழித்தபோது எம் உறவுகளைக் காப்பாற்ற மருத்துவப் பொருட்களைக் கொண்டுவந்து சேர்க்கப் புறப்பட்டவன் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலின் போது 28.04.2009 அன்று கடற்தாய்மடியில் தன்னைக் கரைத்துக் கொண்டான்.

தமிழீழ விடுதலைக்காக உயிராயுதமாய்க் கடல்தாய் மடியில் காவியம் படைத்தவர் வரிசையில் கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறனும் இணைந்து கொண்டான்.காலப்பெருவெளியில் கரைந்திடாத உங்கள் ஈகங்கள் இந்த ஞாலம் உள்ளவரை வாழும்.