அழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.

632 0

நள்ளிராக் கடந்து பொழுது புதிய நாளை பிரசவித்துக் கொண்டிருந்தது. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் வெண்ணிலவு மெல்லமெல்லத் தன் ஒளிமுகத்தைக் காட்டத் தொடங்கியது. ஆங்காங்கே உயரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் மெல்லக் கரைநோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. அலையடிக்கும் கடலின் மடியில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாய் அவர்களது படகும் நகர்ந்து கொண்டிருந்தது.
இன்றைய நாள் தமக்கானதாக இருக்க வேண்டும்.எப்படியாவது தமக்குச் சாதமாக இலக்கு அமைந்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்கள் மனங்களுக்குள் நிறைந்திருந்தது. மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தம்மையே அர்ப்பணிக்கத் துணிதல் என்பது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகத் துறவறத்தை புரிவதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு மணித்துளிகளையும் மிக நிதானமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இந்த இலக்கிற்காக இரவுபகல் பாராது, ஊணுறக்கம் மறந்து தொடர்ந்து ஐந்து,ஆறு நாட்களாக சளைக்காது கடல்தாய்; மடியில் வலம்வந்து கொண்டிருந்தார்கள். சிலபொழுதுகள் கைக்கு கிடைப்பது போல் தெரியும் இலக்கு அருகே நெருங்கும்போது, வேகமேடுத்து விரைந்து சென்றுவிடும். சிலவேளைகளில் கண்ணுக்கே புலப்படாது. ஆனால் இன்று இலக்கை கண்ணுக்குள்ளே வைத்து பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
திருமலை துறைமுகப்பகுதி, எப்போதும் பலத்த பாதுகாப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் எதிரி விழிப்போடு இருக்கும் கடற்படையின் பெரும் கோட்டை. அந்தக் கோட்டையைக் கண்காணிக்க நவீன மொழில்நுட்ப ராடர் கருவிகளும்,கனரக ஆயுதங்களும் பூட்டி எப்போதும் ரோந்துப் பணியில் கம்பீரமாய் வலம் வரும் டோறாக்கடற்கலங்கள்.அந்த டோறாக் கடற்கலங்களில் ஒன்றுதான் அவர்களுக்கான இலக்காகியது.

தமது இலக்கை கண்காணித்தபடி எதிரிக்கு எந்த சந்தேகமும் ஏற்படாத வண்ணம் அமைதியாய் அவர்கள் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பெரும் உற்சாகம். தொலைத் தொடர்புக்கருவியில் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”என்ற தாரக மந்திரத்தை காற்றலை தாங்கிவந்து காதுகளில் ஒலிக்கச் செய்கிறது.
அதன் பின்னரும் அவர்களை வழிப்படுத்திக் கொண்டிருந்த சண்டைத் தொகுதியின் கட்டளை அதிகாரிகளோடு வஞ்சியின்பன் உரையாடிக் கொண்டிருந்தான். ~~இன்னும் சில மணித்துளிகளில் நான் வெடிச்சிருவன்..,என்ர மனக்கண்ணில இப்ப அண்ணேன்ர முகம்தான் வந்து போகுது…., கடைசிவரைக்கும் அண்ணைக்குப் பக்கபலமா எல்லாரும் இருங்கோ…., உங்கள நம்பித்தான் நாங்க போறம்.., நாங்க எங்களின் உயிரிலும் மேலாக நேசிக்கின்ற மக்களிட்டச் சொல்லுங்கோ..எப்பவும் உங்களுக்காக நாங்க இருக்கிறம் எண்டு.., எங்கள மறக்காதையுங்கோ… அந்தக் கடைசிக் கணங்களிலும் உறுதியோடு அவன் உரையாடிக் கொண்டிருந்தான்.
“இப்ப ஐம்பது மீற்றருக்குள்ள நெருங்கீற்றம். ஒருத்தன் எங்களக் கண்டிட்டான்.. ஆயுதத்துக்கு கிட்ட வாறான்.. இப்ப அடிக்கப்போறான்..”

அவன் சொல்லி முடிக்கமுதல் எதிரியின் கனோன் பீரங்கிகளைப் பொழியத்தொடங்குகிறது. அப்போதும் அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
“நாங்க நெருங்கீற்றம் ..இந்தா இடிக்கிறம்..”

அவனது தொடர்பு துண்டித்துக் கொண்ட சமநேரத்தில் கேட்டது பேரோசை, கடல் மடியில் தெரிந்தது பெரும் தீப்பிழம்பு எல்லாமே சில கணங்கள் தான். அந்த சில நொடித்துளிகளுக்குள் எதிரியின் டோறாக் கடற்கலம் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போனது.

தமிழினத்தின் இருப்புக்காக, தமிழ் மக்களின் மகிழ்வான வாழ்விற்காக தம்மையே உயிரீகம் செய்து போனவர்கள் வரிசையிலே லெப்டினன் கேணல் நளாவும், மேஐர் வஞ்சியின்பனும் தமிழீழ வரலாற்றின் பக்கங்களில் பதிவாகிப் போயினர்.
கடற்கருப்புலி மேஐர் வஞ்சியின்பன்.
வானைப்பிளக்கும் அளவுக்கு சிரிப்பொலி ஓரிடத்தில் கேட்கின்றது என்றால் அந்த இடத்தில் வஞ்சியின்பன் இருக்கிறான் என்பது சொல்லாமலே புரிந்துவிடும். அந்தளவிற்கு தன் பேச்சாலும் நகைச்சுவை உணர்வாலும் எல்லோர் மனங்களுக்குள்ளும் நிறைந்திருப்பவன் அவன். ஒருவர் முகத்தில் சின்னதாய் ஒரு வாட்டம் தெரிந்தால்கூட அதை இனங்கண்டு அந்த முகத்தை மீண்டும் மலரவைப்பதில்; அவன் கைதேர்ந்த நிபுணன்.

விளையாட்டு அவனுக்குப் பிடித்தமான ஒன்று. பள்ளிநாட்களிலேயே படிப்பில் காட்டிய அதே அக்கறையை,விருப்பை விளையாட்டின் மீதும் அவன் கொண்டிருந்தான். அதனாலோ என்னவோ துடுப்பாட்டமாக இருக்கட்டும் இல்லை உதைபந்தாட்டமாக இருக்கட்டும் அந்த விளையாட்டுக்களின் சட்ட திட்டங்கள்,நெளிவு சுளிவுகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. அதனால் எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விளையாடுவதற்காக கடற்கரையில் கூடுகின்றபோது அவனை நடுநிலமைத் தீர்ப்பாளனாக அனைவரும் தேர்ந்தெடுத்து விடுவார்கள்.
துடுப்பாட்டம் என்றால் சொல்லவே தேவையில்லை.அவன் களத்தில் நேரடியாகவே இறங்கிவிடுவான்;. துடுப்பெடுத்து பந்தை அடித்துவிட்டு கடற்கரை மணலில் ஒருகால் புதையப் புதைய ஊன்றுதடியோடு விரைந்து ஓடுவதில் அவனுக்கு நிகர் அவனேதான். எதிர்கன்னையில் நின்றவர் பந்தெடுத்து வருவதற்குள் அவன் குருவிபோல் மூன்று நாலு வட்டம் ஓடிமுடித்திருப்பான்.

எதுவும் முடியாது என்பது அவன் அகராதியில் இல்லை.நாற்பது குதிரை வலு இயந்திரமாக இருக்கட்டும் இல்லை எரிபொருள் கொள்கலன்களாக இருக்கட்டும் எவ்வளவு பழுவாக இருந்தாலும் சாதாரணமாக அதை சுமந்து செல்வான். தனக்கு கால் இல்லை என்ற குறையை அவன் ஒருபோதும் தன்னருகே அண்டக்கூட விட்டதில்லை. அதேபோல் மற்றவர்கள் யாராவது ~அவன் பாவம் காலில்லையே| என்று இரக்கப்பட்டு உதவி செய்வதையும் அவன் விரும்புவதில்லை. தனது வேலைகளை தானே செய்து முடிக்கவேண்டும் என்பதில் எப்போதும் அவன் பிடிவாதமாக இருப்பான்.
1998 ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட வஞ்சியின்பன், மாறன் -11 பயிற்சிமுகாமில் தொடக்கப் பயிற்சிகளை நிறைவு செய்தபோது இம்ரான் பாண்டியன் படையணிக்கு உள்வாங்கப்பட்டிருந்தான். அதன்பின்பு படையணிக்குரிய கனரக ஆயுதப் பயிற்சிகள்,மோட்டார் பயிற்சிகள் என புடமிட்டு வளர்க்கப்பட்டவன் ஓயாத அலைகள்-3 களங்களில் தன்போரிடும் திறனை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தான்.

2000-2001 ஆம் ஆண்டு காலப்பகுதி ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ் மண்நோக்கி நகர்ந்தபோது சாவகச்சேரி, மட்டுவில், நுணாவில், கைதடி, அரியாலை என நிலம் மீட்புப்போரும் நீண்டு விரிந்திருந்தது. அந்தக் களங்களில் எல்லாம் படையணிக்குரிய 60 எம்.எம் மோட்டார்களோடு மிகத்துள்ளியமாக எறிகணைகளை வீழ்த்தி எதிரியை திணறடிப்பதில் அவன் கெட்டிக்காரன்.
எப்போதும் அவனுக்குள் இருக்கும் சுட்டித்தனமும் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற விருப்பமும் அவனை மிகக் குறுகிய காலத்துக்குள்ளே போரியலில் பட்டை தீட்டிய வைரமாய் ஒளிர வைத்தது. இந்தக் களமுனைகளில்தான் படையணிக்குரிய வேவு நடவடிக்கைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தான். இந்தவேளையில்தான் அரியாலைப்பகுதியில் எதிரியின் தாக்குதலில் விழுப்புண்பட்டு அவனது இடது கால் தொடைப்பகுதியோடு துண்டிக்கப்படுகின்றது.
எப்போதும் மக்களுக்காகவும் தமிழீழ மண்ணுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, துருதுருவென ஓடித்திரிந்த அவன் தனது ஒருகாலை இழந்து மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது கூட சற்றும் தளர்ந்து போகவில்லை. தன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள் பெரும்தீயாய் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அந்தத் தீ கரும்புலி என்கின்ற புனிதபயணத்தில் தன்னையும் பங்காளியாக்க வேண்டும் என்ற ஓர்மத்தை அவனுக்குள் உருவாக்கிக் கொண்டது. அப்போதுதான் கடற்கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்தக் கொள்ளுமாறு தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம்மேல் கடிதம் எழுதத் தொடங்கினான். அவரிடமிருந்து தனக்குச் சாதகமான பதில் வரும்வரை அவன் விடாமுயற்சியோடு தனது விருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான்.

அவன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. செம்மலையில் அமைந்திருந்த கடற்கரும்புலிகளது பயிற்சிப்பாசறைக்கு வந்தபோது கடலும் கடல்சார் அனுபவங்களும் அவனுக்குப் புதிதாகவே இருந்தது. ஆனால் மிக விரைவிலேயே அலைபுரட்டும் கடல் மடியில் பக்குவமாய் படகோட்டவும், படகின் இயந்திரங்களை இலகுவாகக் கையாளவும், தொலைத்தொடர்பு பற்றிய பூரண அறிவையும் அவன் பெற்றுக் கொண்டான். படகில் எந்த நிலையிலும் ஏறிச் செல்வதற்குரிய தகுதியை அவன் மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே வளர்த்தும் இருந்தான்.
அன்றைய காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை மிகவும் இறுக்கம் நிறைந்ததாக இருந்தது. ஒருபக்கம் சமாதான பேச்சுக்களை நடத்திக் கொண்டு மறுபக்கம் விடுதலைப்போராட்டத்தை நசுக்கிவிடும் செயற்பாடுகளிலும், மறைமுகப்போரை முடுக்கி விடுவதிலும் சிறிலங்கா அரசு முனைப்போடு செயற்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் முல்லை மண்ணில் இருந்து தென்தமிழீழத்துக்கான வளங்கள் பணியை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில் ஒரு சிறிய படகிற்கு கட்டளை அதிகாரியாகச் சென்று வந்த வஞ்சியின்பன் தனது ஆளுமைத்திறனால் நான்கு படகுகளைக் கொண்ட ஒரு தொகுதியை வைத்து வழிப்படுத்தும் அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தான்.
கிட்டத்தட்ட தொடர்ச்சியாக ஆறு மாத காலப்பகுதி ஓய்வு, பசி, தூக்கம் எதுவும் எவருக்கும் இல்லை. கடின உழைப்பு, விடாமுயற்சியோடு கொடுக்கப்பட்ட அந்தப் பணியை மிகச் சிறப்பாகச்செய்து முடித்த அந்த அணியில் அவனுக்கும் பெரும்பங்கு இருந்தது. யாருக்கு சுவையாக உணவு சாப்பிடத் பிடிக்குமோ அவர்களுக்கு நன்றாகவே சமைக்கவும் தெரியும் என்பதற்கு அவன் சிறந்த எடுத்துக்காட்டு. சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தால் சமையல்கூடத்தில் அவன் தனது கைவித்தையைக் காட்டிக் கொண்டிருக்கிறான் என்பது அந்தப் பாசறையில் இருப்பவர்கள் அனைவருக்கும் புரிந்துவிடும்.

வழமைக்கு மாறாக முந்தியடித்து சாப்பாட்டு நேரத்துக்கு முன்னதாகவே எல்லோரும் சாப்பிடக் கூடிவிடுவார்கள். சமைப்பதில் மட்டுமல்ல அதை அனைவருக்கும் சமனாக பகிர்ந்தளிப்பதிலும் அவன் கெட்டிக்காரன். கேலியும் கிண்டலும் கலகலப்புமாய் எல்லோரும் கூடியிருந்து அடிபட்டு பகிர்ந்துண்பதில் இருக்கும் மகிழ்வே தனி.அந்த மகிழ்வைத் தருவதில் பெரும்பங்கு அவனுடையதாக இருந்தது.
2005ஆம் ஆண்டு காலப்பகுதி, கரும்புலி அணியினருக்கு கைத்துப்பாக்கிக்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேசியத் தலைவர் அவர்களால் கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டன. அந்தச் சிறப்புப்பயிற்சிப் பாசறையில் இரண்டாவது அணியில் பயிற்சிகளைப் பெற்றுத் தேசியத் தலைவர் அவர்களின் கைகளால் கைத்துப்பாக்கிகளைப் பெற்றதிலிருந்து ஒரு குழந்தையைத் தாய் எப்படி பத்திரமாய்ப் பேணிப் பாதுகாப்பாளோ அதைப்போல அந்தக் கைத்துப்பாக்கியை அவன் பாதுகாத்தான்.

அவன் செல்லமாக மரஅணில் ஒன்றை வளர்த்து வந்தான். ஓருநாள் கடலுக்குச் சென்று திரும்பி வந்தபோது அந்த அணிலைக் காணவில்லை. அன்று முழுவதும் அந்த அணிலைத் தேடித்தேடித் பசியோடே அலைந்தான். எதற்கும் கலங்காத அவன் விழிகள் கூட அன்று கண்ணீரால் நனைந்திருந்தது. அந்தளவுக்கு உயிர்களிடத்தில் அன்பு கொண்டவன். பொதுவாகவே வெள்ளையுள்ளம் கொண்ட நல்ல மனது அவனுக்கு.
எப்பொழுதும் கலகலப்பாய் மற்றவர்களை மகிழ்வித்தபடி இருக்கும் அவனுக்கு எப்படியாவது ஒரு “டோறா” கடற்கலத்தை தகர்க்க வேண்டும் என்ற கனவே அதிகமாக இருந்தது. தனக்கான இலக்கைத்தேடி நாளும் பொழுதும் காத்திருந்தவனுக்கான சந்தர்ப்பமும் கனிந்தது.தேசத் தலைவனோடு கூடி அகமகிழ்ந்திருக்கும் அந்த பொன்னான பொழுது வந்தது. அன்று அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பெரும் பூரிப்பில் திளைத்திருந்தான்.

அவனுக்கான இலக்குக் கிடைத்து அதற்காக அவன் சென்று வந்து கொண்டிருந்த ஓர்நாள,; கடலுக்குச் போய்வந்த அசதி,சிறு ஓய்வுகூட எடுக்கவில்லை. தனது நண்பனை அழைத்துக் கொண்டு மல்லாவியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றான். போராளிகளோடு எப்பிடி கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்வாக இருக்கிறானோ அதேபோலதான் வீட்வர்களோடும் இருந்தான்.

அவனுக்குத் தெரியும் இதுதான் தான் வீட்டவர்களைப் பார்க்கப் போகும் கடைசி நாள் என்பது. ஆனால் ஒரு துளிகூட அந்த ஏக்கமோ பதற்றமோ அவனிடத்தில் இருக்கவில்லை. அவசரஅவசரமாய் அம்மா சமைத்துத் தந்த உணவை சாப்பிட்டு விட்டு விரைவாகவே அங்கிருந்து புறப்பட்டான். திரும்பவும் படகிறக்கும் நேரத்துக்கு முன்னதாக கடற்கரைக்குச் சென்று விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது.
கரும்புலி என்பதற்கு யாராலும் அசைக்கமுடியாத மனோதிடமும் உறுதிப்பாடும் கொண்டவர்கள் என்ற அர்த்தத்தின் உண்மைத் தன்மை அவனில் நிறைந்திருந்தது.
07.01.2006 அதிகாலைப் பொழுது தமிழீழக் கடற்பரப்பு அமைதி போர்த்திக் கிடக்க, இலக்கை சரியாக அவதானித்து கடைசிவரை கதைத்துக் கொண்டே சென்று டோறாக்கலம் அழித்து தனது இலட்சியக் கனவை நிறைவேற்றி தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துக் கொண்டான்.