‘சிங்களவர்களுக்கு நாம் எதிரிகள் அல்லர்’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

328 0

cv-wickneswaran_newsfirst1“இந்த நாட்டின் வடக்கு – தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம்.  நாம் ஒன்று சொன்னால் மற்றொன்றைக் கூறுகின்றனர். சிங்கள மக்களுக்கு நாங்கள், ஒருபோதும் எதிரிகள் அல்லர். ஆனாலும், சமஷ்டி முறையே எமக்கு வேண்டும்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எழுக தமிழ் தொடர்பில் தெற்கில் ஏற்பட்டுள்ள தவறான கருத்துகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்த, “வடக்கு- தெற்குக்கான கலந்துரையாடல்” எனும் ஊடகவியலாளர் சந்திப்பு, இலங்கை மன்றக் கல்லூரியில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறியதாவது,

“வடக்கு – தெற்கு மக்களுக்கு இடையில் பிரச்சினைகள் முற்றுவதற்கு, மொழி ஒரு பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒரு சிலரைத் தவிர, நாம் யாரென்று இங்குள்ளவர்களுக்குத் தெரியாது. அப்படியிருக்கையில், மூன்றாம் தரப்பினர் எம்மைப் பற்றிச் சொல்வதைக் கொண்டு, தெற்கிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஏனையவர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர்.  ‘எழுக தமிழ்’ஆனது, மக்களுக்கான ஓர் அமைப்பு. அதில், சமூக அக்கறை கொண்டவர்களே உள்ளனர். எனினும், அதன் நடவடிக்கையை தெற்கில் திரிபுபடுத்திக் கூறிவிட்டனர். வடக்கு மக்களின் அபிலாஷைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் நடவடிக்கையையே, நாம் முன்னெடுத்திருந்தோம்.

“புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையிலும், சமஷ்டி முறையினையே நாம் முன்வைத்துள்ளோம். சமஷ்டியே எமக்குத் தேவை. ஒன்றிணைந்த நாட்டுக்குள், அதிகாரப் பரவலாக்கலே வேண்டும். அது தனி நாட்டுக் கோரிக்கை என்று அர்த்தப்படாது. இதனை நாம் மட்டுமல்ல, தந்தை செல்வாவும் முன்வைத்திருந்தார். எனினும், அதில் ஒரு சிறு குறையுள்ளது. அதாவது, தமிழரசுக் கட்சியில், ‘தமிழரசு’ என்ற பதத்தை, பெரும்பான்மையினத்தினர் தவறாக விளங்கிக்கொண்டு, ‘தனி நாடு’ என அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.

“எமது சமஷ்டிக் கோரிக்கையை, அரசாங்கம் எந்தவிதத்தில் அணுகுகின்றது, என்ன முடிவெடுக்கின்றது என்பதைப் பார்த்த பின்னர்தான், அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி யோசிப்போம்.

“யுத்தக் குற்ற விசாரணையில், வெளிநாட்டு உள்ளீடுகள் வேண்டும். இதில் மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வழக்கு நடத்துநர், நீதிபதிகள், சட்டம். யுத்தக் குற்ற விசாரணை நடத்துவதென்றால், அது தொடர்பான சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கையும் கொண்டுவரப்பட வேண்டும். அடுத்து, வழக்கை நடத்துவது மற்றும் நீதிபதி யார் என்பது தொடர்பில் கேள்வி எழுகின்றது. வெளிநாட்டு நீதிபதிகள் நிச்சயமாக தேவை. ஏனெனில், பெரும்பான்மையின நீதிபதிகள் மேல் நம்பிக்கையில்லை. இதனை நான் சொல்லவில்லை, பெரும்பான்மையின சட்டத்தரணிகளே சொல்லியுள்ளனர்.

“யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கடந்தும், இராணுவத்தின் பிடியில் வடக்கு மாகாணம் உள்ளது. 30 வருட யுத்தத்துக்கு 300 வருடங்கள் இராணுவத்தை அங்கு நிலைநிறுத்துவீர்களா? வடக்கிலுள்ள மக்களின் நிலங்களை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சினையாகும். நிலங்களை கட்டம் கட்டமாகவேனும் விடுவிக்க வேண்டும். எனினும், வாக்குறுதியளித்ததைவிட குறைந்தளவிலேயே விடுவித்துள்ளனர். நிலங்களை விடுவிக்க இராணவத்துக்கு விருப்பம் இல்லை. “மாவீர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தெற்கில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இறந்த ஒருவரை நினைக்கும் உரிமை, எல்லோருக்கும் உண்டு. 2012ஆம் ஆண்டில், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோது, ‘கூட்டம்’ என்ற சொல் ‘பேரணி’ என்று தவறாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டதால் தாக்குதல் நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பொலிஸார், ஆயதங்களுடன் குவிக்கப்பட்டனர். பின்னர் நாம், அது தொடர்பில் விளக்கமளித்திருந்தோம். புலிகள் மீது உள்ள வைராக்கியமே, தமிழர்கள் என்ன செய்தாலும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத் தூண்டுகின்றது. இதில், புலிகளுக்கு உயிர்கொடுக்கும் நோக்கம் இல்லை. ஏனென்றால், புலிகள் தோற்றம் பெற்றமைக்குக் காரணமே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமைதான். பிரச்சினைக்குத் தீர்வு தான் நாம் கேட்கின்றோம். தீர்வைக் கொடுத்தால், புலிகளுக்கு தேவையில்லையே?

“வடமாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாகச் சொல்கின்றார்கள். எமக்குத் தருவதாகச் சொன்ன நிதியில், சிறு பகுதியை மாத்திரம் கொடுத்தால், அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று (நேற்று) கலந்துரையாடினேன். ஜனவரி மாதத்துக்குள் உறுதியளிக்கப்பட்ட நிதியை அனுப்பிவைப்பதாக, ஜனாதிபதியும் நிதியமைச்சரும் உறுதியளித்தனர்.

“நாம், சிங்கள மக்களுடன் கைகோர்க்கத் தயார். முதலில் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தாருங்கள். பின்னர், ஒரே நாட்டுக்குள் இணைந்து வாழ்வோம். தமிழர்கள் – சிங்களவர்களை விவாகம் முடிக்க, எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதற்கு முன்னர், எமக்குத் தீர்வு தேவை’ என்றார்.