‘வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது’

325 0

fotorcreated-307‘வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு’ என, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனையானது, நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘அண்மையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள்வெட்டுக்கள் உட்பட சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

‘இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்யப்படுகின்ற நபர், அவர் எப்பிரதேசத்தில் கைதுசெய்யப்படுகிறாரோ அவர் அப்பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது. ஆனால், தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

‘குறிப்பாக யுத்த காலத்தில் இவ்வாறு கொழும்பு நீதிமன்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக முற்படுத்தப்பட்டிருந்தமை ஏற்றுக்கொள்ள முடியுமாக உள்ளபோதும் தற்போது நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் 9 நீதிமன்றங்கள் இங்குள்ள போதும் மீண்டும் கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவது தொடர்பாக வடமாகாணத்தில் எந்த நீதிமன்றங்களும் இல்லையா? என்ற கேள்வியும் எண்ணமும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன. ‘ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு 70 சதவீதமானவர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறன நிலையில் இங்குள்ள நீதிமன்றங்களில் இவ் வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையிலும் தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் வெளிநீதிமன்றங்களில் முற்படுத்துவதானது இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்தினையும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு ஆகும். ‘மேலும், இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் இலங்கையின் நீதிமன்றங்கள் என்றாலும் அரசியலமைப்பு சட்டத்தில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ள விடயங்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

‘இந்நிலையில், இது விடயம் தொடர்பாக மனிதவுரிமை மீறல் செயற்பாடு வழக்கினை 2007ஆம் ஆண்டு நடமுறைக்கு வந்த சர்வதேச குடியல் அரசியல் சட்டத்தின் பிரகாரம் மேல் நீதிமன்றில் 3 மாத காலத்துக்குள்ளும் 1 மாத காலத்துக்குள் உச்ச நீதிமன்றிலும் தாக்கல் செய்யலாம்’ எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.