சாத்தான்குளம் வழக்கில் போலீஸ் அதிகாரி கைது- பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள்

330 0

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கும் வரை, சிபிசிஐடி விசாரிக்கும்படி  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து உடனடியாக வழக்குப்பதிவு விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.
நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது சிபிசிஐடி அதிரடியாக போலீசாரை கைது செய்திருப்பதால் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதும், சாத்தான்குளத்தில் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.