இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கூறப்படும் விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று (வியாழக்கிழமை) அங்கு முன்னிலையாகியுள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையில் பலமான வீரர்கள் இருந்தும் சில அதிகாரிகளின் செயற்பாடு காரணமாகவே இலங்கையால் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாமல்போனதாக மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து இலங்கையில் மட்டுமின்றி உலகளவில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
அதற்கமைய கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க ஆகியோரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.