கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது.
பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதேவேளை இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்கள் கிடைக்காது தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சியில் உருத்திரபுரம், பொன்னகர், இரத்தினபுரம், பரந்தன் சிவபுரம், பண்ணங்கண்டி, மலையபளபுரத்தின் ஒரு பகுதி, என பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.
பல வீதிகளில் வெள்ளம் ஊடறுத்து பாய்கிறது. இதனால் சில மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுவரை வெள்ளத்தினால் இடம்பெயரும் நிலைமை மக்களுக்கு ஏற்படவில்லை.
இருந்தும் தற்போது பெய்கின்ற மழை தொடர்ந்தும் பெய்துவருமனால் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் பொழியும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.