சீன விமானங்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றம்!

285 0

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனப் போர் விமானங்கள், ஹெலிக்கொப்டர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் குறித்த பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.  இதன்காரணமாக இந்தியா லடாக் பகுதிக்கு ஏவுகனைகளை அனுப்பிவைத்துள்ளது.

இந்திய – சீனப் படையினருக்கு  இடையிலான மோதல் நிலைமை காரணமாக இந்தியாவை சேர்ந்த 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து எல்லை விவகாரம் தொடர்பாக இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில்  கடந்த சில வாரங்களாகச் சீன இராணுவம் எல்லைப் பகுதியில் சுகோய் 30 போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிகொப்டர்கள்  ஆகியவற்றைக் நிலைநிறுத்தியுள்ளன.

குறித்த  விமானங்கள்  இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்தால் அவற்றை சில நொடிகளுக்குள்  வீழ்த்துவதற்காகக் கிழக்கு லடாக் பகுதிக்கு இந்தியா ஏவுகணைகளை அனுப்பியுள்ளது.

மேலும் எதிரி நாட்டு விமானங்களைக் கண்டறியும் ராடார், ஏவுகணைகளைச் செலுத்தும் வாகனம் ஆகியவற்றையும் இந்தியா அனுப்பியுள்ளது.