சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

234 0

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு உரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 21ஆம் திகதி முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

அதேபோன்று குறித்த 4 மாவட்டங்களில் இன்றும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்களிலும் அனுமதிக்கப்பட்டிருந்த ஹோட்டல்கள், துணிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகங்கள், மளிகைக் கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மருந்தகங்கள், பால் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி, போக்குவரத்து பொலிஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேநேரம், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீதிகளில் சுற்றுவோர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த முறை தீவிர ஊரடங்கின்போது கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இந்த தடவையும் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.