இந்தியாவில் ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

236 0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. இந்த வைரஸினால் புதிதாக 20 ஆயிரத்து 131 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 29 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்றினால் புதிதாக 414 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 3 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 2 இலட்சத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் அதேசமயம், அவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இந்தியாவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியன விளங்குகின்றன.

மகராஷ்டிராவில் இதுவரையில் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் இந்த வைரஸ் காரணமாக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 1000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.