அர்ஜென்டினாவில் ஜூலை 17ஆம் திகதி வரை முடக்கநிலை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகிறது!

231 0

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கடுமையாக அதிகரித்ததைத் தொடர்ந்து தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமூக தடுப்பு மற்றும் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை நீடித்துள்ளது.

அர்ஜென்டினாவில் ஒட்டுமொத்த கொவிட்-19 தொற்றுகள், மே மாத இறுதியில் இருந்து ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸ் உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் ஜூலை 17ஆம் திகதி வரை மீண்டும் கடுமையாக்கப்படும் என அர்ஜென்டினாவின் ஜனாதிபதி அல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்கள் சுகாதார அமைப்பு தயாராக உள்ளது. அனைவருக்கும் சேவை செய்ய முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க நாம் நேரம் பெற வேண்டும்.

தனிமைப்படுத்தல் தொற்றுநோய்க்கு ஒரு தீர்வாகும். எங்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு தீர்வு. பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது. ஆனால் பொருளாதாரம் மீட்கப்படும்’ என கூறினார்.

அர்ஜென்டினாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 55,343பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,184பேர் உயிரிழந்துள்ளனர்.