டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 19.11.2015 அன்று காலை 11.00 மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வி விபுஷா சிவகுமார் ஏற்றிவைத்தார்.
அதன்பின்பு அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் வார தொடக்க நிகழ்வாக இடம்பெற்ற இந் நிகழ்வில் ஈகைச்சுடரினை மண்மீட்புப் போரினில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கிளிநொச்சி இராமநாதபுரத்தினை சேர்ந்த 2ஆம் லெப்டிணன் கதிரவன் என்று அழைக்கப்படும் தம்பிஐயா கேசவன் அவர்களின் சகோதரர் திரு தம்பிஐயா ஜெயசேகரன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் துயிலுமில்ல பாடல் காணொளியில் காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கார்த்திகை பூவினை கல்லறைக்கு காணிக்கையாக்கினார்கள். மாவீரர் தொடர்பான நிகழ்ச்சிகளான கவிதை, பேச்சு, நடனம் மற்றும் நாடகம் போன்ற மாவிரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எமது பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.
வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை போராடுமா பாடலுக்கு நடனம், இவர்கள் விதைக்கப்படுகின்றார்கள் புதைக்கப்படவில்லை சிறிய நாடகமும் இறுதியாக தன்மானப் போரடா எழுச்சி பாடலுக்கு நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் தட்டி எழுப்பினார்கள் வளர்தமிழ் 4, 5 மாணவர்கள்.
சிதைக்கப்பட்ட கல்லறைகள்
சித்திரமாய்ச் சிறப்பெடுக்கும்!
விதைக்கப்பட்ட கருவறைகள்
புத்துயிராய்ப் பிறப்பெடுக்கும்!
புதைக்கப்பட்ட உணர்வலைகள்
அணைதாண்டிப் பெருக்கெடுக்கும்!
தமிழனாய் மீண்டும் தலை நிமிர்வோம்!
தன்மானத்தோடு மீண்டும் உயிர்பெறுவோம்!!