துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒன்றே!

246 0

ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் அரசியல் பலத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒரே முடிவையே தரும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செ. மயூரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டம் வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்

எதிர்வருகின்ற தேர்தலானது எம்மை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான தேர்தலாகும். ஏனெனில் எமக்கான அரசியல் இருப்பை எமது உரிமைக்கான இருப்பை நிர்ணயம் செய்கின்ற தேர்தலாக இது இருக்கப்போகின்றது

அகிம்சை வழியில் போராடிப்பார்த்தோம். பின்னர் அண்ணன் பிரபாகரன் தலைமையில் ஆயுதமேந்தி போராட்டத்தினை முன்னெடுத்துச்சென்றபோது எங்களுக்குள் உள்ள சில விசமிகள் காரணமாக எங்களுக்குள் உள்ள சில துரோகிகளின் காட்டிக்கொடுப்புகள் காரணமாக நாங்கள் 2009 ஆம் ஆண்டு எங்களுடைய நிலப்பரப்புக்களை எங்களுடைய ஆயுதப்பலத்தினை கைவிட்டு அரசியல் ரீதியான போராட்டத்தினை இன்று முன்னெடுத்து சென்றுகொண்டிருக்கின்றோம்.

ஆயுதப்போராட்டம் உச்சம் பெற்றுக்கொண்டிருந்தபோது கருணா அம்மான் போன்ற துரோகிகள் எமது ஆயுதப்போராட்டங்களை சின்னாபின்னமாக்கி எமது இருப்பை கேள்விக்குறியாக்கிய நிலையில் எமது அரசியல் ரீதியான போராட்டத்தில் இன்று விக்னேஸ்வரனும் எங்கேளோடு உடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் இன்று கருணா அம்மான் செய்த அதே துரோகத்தனத்தினை செய்துகொண்டிருக்கின்றனர்.

நல்லவர் போல வேடமணிந்து முன்னாள் முதலமைச்சர் இன்று எங்களிடம் வாக்குகளை கேட்கின்றார். என்னைப்பொறுத்தவரையில் கருணா அம்மானுக்கு வாக்களிப்பதும் விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒரே முடிவையே சொல்லும். எங்களைப்பொறுத்தவரையில் எல்லோரும் துரோகிகளே.

நாங்கள் எங்கள் அரசியல் இருப்பை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக அரசியல் ரீதியான களத்தில் நாங்கள் நிற்கின்றோம்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய இருப்பு நிலையானதாக இருக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

வடக்கு கிழக்கு நிலப்பரப்பில் தமிழனை தமிழன் ஆழ வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம். ஆனால் சிங்கள தேசியக்கட்சிகளே ஆளவேண்டும் என்று இன்று களம் இறங்கியுள்ள சுயேற்சைக்குழுக்களும் சில அரசியல் கட்சிகளும் எண்ணுகின்றன. அவர்கள் வெறும் பணத்திற்காக இறக்கப்பட்டவர்கள். எங்களோடு நின்றவர்களும் பணத்திற்காக அவர்களுடன் சென்றுள்ளனர்.

எனவே தமிழர்கள் சரியாக புரிந்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எமது இருப்பை கேள்விக்குறியாக்கும் நிகழ்ச்சி நிரலை தெற்கில் உள்ள ஆட்சியாளர்கள் செய்துவருகின்றர். அவர்களால்தான் இவ்வளவு பிரச்சனைகளும் இங்கு உருவாகியுள்ளது.

இந்நிலையில் எமது தமிழ் தேசிய அரசியலை இளம் சமூகம் எடுத்துச்செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அனுபவமுள்ளவர்களோடு இளம் தலைமுறையினராகிய நாமும் பாராளுமன்றத்தின் ஊடாக எதிர்கொள்ளவேண்டும். ஆகவே தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இளம் வேட்பாளராக வன்னி தேர்தல் தொகுதியில் நான் களம் இறங்கியுள்ளேன் என தெரிவித்தார்.