மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேம்படுத்த நூல்கள் வழங்கிவைப்பு!

256 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேன்படுத்தும் வகையில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலில் இன்று (23) காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களுக்கு உலக அறிஞர்கள், ஞானிகள் மற்றும் புனிதர்கள் ஆகியோரின் நூல் தொகுதியினை வழங்கிவைத்தார்.

கொரோனா காலங்களில் பாடசாலை செல்லாமல் வீடுகளிலும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களிலும் உள்ள சிறார்களின் அறிவு திறனை மேம்படுத்தவே இந்த வேலைத் திட்டம் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது அரசாங்க அதிபர் உரையாற்றுகையில், ‘சிறுவர்கள் தனியாக பாட அலகுகளுக்கு அப்பால் உலகத்தின் வரலாறுகளையும் சமூகப் பெரியார்களின் வரலாற்று அறிவினையும் சிறுபருவத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறுவர்களை நற்பிரஜகளாக மாற்றுவதற்கு எமது சிறுவர் இல்லப்பொறுப்பாளர்கள் மற்று சிறுவர்கள் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்’ – என கேட்டுக்கொண்டார்.