வடக்கில் இடம்பெறுகின்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கமே!- விக்னேஸ்வரன்

244 0

வடக்கில் இடம்பெறுகின்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டு இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூடடணியின் தலைவரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானவர்கள் என்று எடுத்துக் காட்டும் நடவடிக்கையாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஏப்ரல் மாத குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அதில் சம்பந்தப்படாத தமிழர்கள் சிலரையும் இணைத்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முஸ்லீம் மக்கள் சில அடிப்படைவாதிகள் நிமித்தம் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள் என்றால் அதற்காக வடக்கு மாகாண தமிழ் மக்களை பிரச்சனைகளுக்குள் உள்ளாக்குவதற்கான அவசியங்கள் இல்லை.

இது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானவர்கள் என்று எடுத்துக் காட்டும் நடவடிக்கை ஒன்று.

அந்த காலங்களில் கொழும்பிற்கு செல்பவர்களை எத்தனை சோதனை சாவடிகளில் ஏற்றி இறக்கினார்கள்.

அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு சென்ற என்னை கூட கொரோனாவை காரணம் காட்டி என்னை இடைவழியில் மறித்து திருப்பி அனுப்பினார்கள்.

வடக்கில் தற்போதைய நாட்களில் இடம்பெறுகின்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் துப்பாக்கி பிரயோகங்கள் எதோ ஒரு காரணத்திற்காகவே இடம்பெறுகின்றன.

என்னைப்பொறுத்தவரையில் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களின் வாக்குகளை கவருவதற்காகவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று கூறுவேன். சிங்கள மக்களுக்கு சிறுபான்மை இந மக்கள் எல்லோரும் எதிரானவர்கள்.

எனவே இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கக்கூடியவர்கள் நாங்களே என்ற ஓர் கற்பனையை தென்னிலங்கைக்கு தெரியப்படுத்துவதன் மூலமாக சிங்கள மக்களிடம் இருந்து அதிகளவான வாக்குக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று சிந்திக்கின்றனர்.

இதனால்தான் இவ்வளவு நாட்களும் இல்லாத குண்டுவெடுப்புக்கள் இடம்பெறுகின்றன. என்னைப் பொறுத்த வரையில் அரசியல் உள்நோக்கத்துடனேயே இவ்வாறான சம்பவங்கள் வடக்கில் இடம்பெறுகின்றன என்பது என்னுடைய கருத்து என்றார்.