மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது என்றும் குறித்த உப்பளத்தை அபிவிருத்தி செய்து மேலும் அதன் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களின் ஒருவரான அமைச்சர் றிஸாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சரிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்றையதினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்தின் பிரதான வளங்களாகக் காணப்படுகின்ற ‘மாந்தை சோல்ற் லிமிற்றட்’, ஆனையிறவு உப்பளம், மன்னார் மற்றும் குறிஞ்சாத் தீவு உப்புக் கூட்டுத் தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையினை உடனே தடுத்து நிறுத்துமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களிடம் மாவட்டச் செயலக வாசலில் வைத்து மகஜர்களைக் கையளித்தனர்.
குறித்த மகஜர் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண முதலமைச்சரிடமும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது மாந்தை உப்பு உற்பத்திக் கூட்டுத் தாபனத்தை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த உப்புக் கூட்டுத் தாபனமானது தனியார் மயப்படுத்தப்படாது எனவும் அவற்றை அபிவிருத்தி செய்து விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிசாட் பதியுதீன் உறுதியளித்தார்.