கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளதாக தவறாக குறிப்பிட்ட முதல்வரின் தனிப்பிரிவு

272 0

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொல்லியல் தடயங்கள் நிறைந்துள்ளன. மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தொல்லியல் தடயங்களைப் பாதுகாப்பதற்கான அருங்காட்சியகம் அமைக்கப்படவில்லை.

இதுதொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கோ.செங்குட்டுவன், கடந்த 24.11.2018 அன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், “விழுப்புரம் மாவட்டத்தின் தொல்லியல் தடயங்களைப் பாதுகாக்கும் வகையில், விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து நேற்று (ஜூன் 23) மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பப்பட்டு இருந்தது.

அதில், “விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஏற்கெனவே அரசு சார்பில் ஒரு அருங்காட்சியகம் இயங்கி வருவதால் தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறும்போது, “விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதனை வலியுறுத்தி, தொல்லியல் துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை ஆணையர் மற்றும் அரசு அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் ஆகியோரை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்து இருக்கிறோம். மனு அனுப்பி ஏறக்குறைய 19 மாதங்கள் கழித்து, கோரிக்கையை நிராகரித்து பதில் அனுப்பி இருக்கிறார்கள்.

இதில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அருங்காட்சியகம் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடங்கப்பட்டும் அதில் திருக்கோவிலூர் இணைந்தும் ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்னமும் அந்தப் பகுதி விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பதாக முதல்வரின் தனிப்பிரிவு இப்போது சொல்லியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தற்போதைய விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் அகழ் வைப்பகமும் இல்லை. அருங்காட்சியகமும் இல்லை. எனவே, விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும்” என்றார்.