நாமக்கல்லில் ரூ.25 கோடியில் ‘பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

289 0

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ (சி.பி.ஜி.) உற்பத்திப் பணிகளுக்கான எந்திரத்தையும், நாமக்கல், சேலம், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஆகிய இடங்களில் 5 சி.பி.ஜி. சில்லறை விற்பனை நிலையங்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தபடி மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐ.ஓ.டி. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ.34 கோடி செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட உயிரி எரிவாயு (பயோ கியாஸ்) உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ கியாசில் இருந்து சி.பி.ஜி. என்ற ‘கம்பிரஸ்ட் பயோ கியாசை தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ.25 கோடி செலவில் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் சி.பி.ஜி. மற்றும் 20 டன் உயிரி உரங்கள் தயாரிக்கப்படும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15, 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும்.

தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் 1,013 மெகாவாட். இதில் மாநிலத்திற்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாடும் சொந்தமானதாகும்.

சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் திட்டத்தை சென்னையை சுற்றியுள்ள பகுதியில் தமிழ்நாடு அரசால் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த நிறுவனத்தைத் தொடங்க ஆதரவளித்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு நன்றி. பசுமை எரிசக்தி உற்பத்தியில் தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.