தூக்கு தண்டனையை ஒழிப்பது பற்றி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலகில் அனைத்து நாடுகளிலும் மரண தண்டனைக்கு நிரந்தர தண்டனை விதிப்பதற்காக ஐ.நா. பொது அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்திருக்கிறது. தூக்கு தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை என்றாவது ஒருநாள் இந்தியா நிச்சயம் எடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மனித நேயர்கள் அனைவருக்கும் இந்நடவடிக்கை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மரண தண்டனை இல்லாத உலகை அமைக்க வேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் லட்சியமாக உள்ளது. உலகிலுள்ள 195 நாடுகளில் 102 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
39 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை. ஆறு நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.
மீதமுள்ள 48 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் என நீளும் அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இன்னும் நீடிப்பது தான் வருத்தமளிக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மொத்தம் 6 முறை யாரையும் கட்டுப்படுத்தாத வகையில் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானங்கள் ஐ.நா. அவையில் கொண்டு வரப்பட்ட போதிலும், அனைத்து தடவையும் அத்தீர்மானத்திற்கு எதிராகவே இந்தியா வாக்களித்திருப்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஐ.நா. பொதுஅவையில் இதுதொடர்பாக இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய இந்தியத் தூதர் மாயங்க் ஜோஷி,‘‘ மரண தண்டனை குறித்த முடிவை ஒரு நாட்டின் மீது திணிப்பது அதன் இறையாண்மைக்கு எதிரானது.
ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்த சட்ட அமைப்பை உருவாக்கவும், சரியான தண்டனைகளை வழங்கவும் இறையாண்மையுடன் கூடிய உரிமை உள்ளது’’ என்று வாதிட்டார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் இறையாண்மையை பாதுகாக்கும் உரிமை வழங்கும் வகையில் தீர்மானத்தில் இந்தியா கொண்டு வந்த திருத்தத்தையும் ஐ.நா. ஏற்றது.
அதற்குப் பிறகும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பதைப் பார்க்கும் போது இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு அதன் இறையாண்மை பெரிதல்ல; மாறாக இந்தியாவில் தூக்கு தண்டனை நீட்டிக்க வேண்டும் என்பது தான் மிகப்பெரிய நோக்கம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த காலங்களில் இதை நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு,‘‘இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதற்கான சூழல் இன்னும் வரவில்லை’’ என்று கூறினார். தூக்கு தண்டனையை ஒழிக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் எதுவும் இருக்க முடியாது.
அகிம்சையையும், கொல்லாமையையும் வலியுறுத்திய மகாத்மா காந்தியடிகளை தேசத் தந்தையாக கொண்டாடும் ஒரு நாடு, மரண தண்டனையை ஒழிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பது அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியாது.
தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டால் அதன்பின்னர் கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு அச்சம் இல்லாமல் போய்விடும்; அதனால் குற்றங்கள் அதிகரித்து விடும் என தூக்கு தண்டனைக்கு ஆதரவாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவில் இப்போது தூக்கு தண்டனை நடைமுறையில் உள்ளது; பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டங்கள் உள்ளன. ஆனாலும், கொடிய குற்றங்கள் குறையவில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
மிகக்கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் நடைமுறையில் உள்ள சில அரபு நாடுகளிலும், சீனாவிலும் கொடிய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை தூக்குத் தண்டனையை ஆதரிப்போர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்திய சட்ட ஆணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி தாக்கல் செய்த அதன் 262-வது அறிக்கையில், ‘‘ இந்தியாவில் பயங்கரவாதம் மற்றும் தேசத்திற்கு எதிரான தாக்குதல் தொடர்பான குற்றங்கள் தவிர மற்றவற்றுக்கு தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்.
அதற்கான சட்டத்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஆய்வு செய்யாமல் கிடப்பில் போட்டிருப்பது துரதிருஷ்டவசமானதாகும்.
சட்டம் இயற்றுவதில் நாடுகளுக்கு உள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவில் வலியுறுத்திய இந்தியா, சட்டம் இயற்றும் போது மக்களின் கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படையையும் உணர வேண்டும்.
எனவே, இந்தியாவில் தூக்கு தண்டனை நீடிக்க வேண்டுமா… ரத்து செய்யப்பட வேண்டுமா? என்பது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலையை முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.