ரூ. 500, 1000 செல்லாது அறிவிப்பால் காஞ்சீபுரத்தில் நெசவு தொழில் முடங்கியது

279 0

201611211727549239_textile-industry-stalled-for-not-valid-of-500-and-1000_secvpf500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் காஞ்சீபுரத்தில் நெசவு தொழில் முடங்கியது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணம் எடுக்கவும் பொதுமக்கள் வங்கி, ஏ.டி.எம்.கள் முன்பு காத்து கிடக்கும் நிலை உள்ளது.

பணப்புழக்கம் குறைந்ததால் பட்டுச்சேலை விற்பனை முற்றிலும் முடங்கி உள்ளது. பல கோடி பட்டுச்சேலைகள் தேங்கி உள்ளது. காஞ்சீபுரம் காந்திசாலை, மேட்டு தெரு, சேக்குபேட்டை நடுத்தெரு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டுசேலை விற்பனை கடைகளில் நடைபெறும்.

இங்கு தினம்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்ளிட்ட பல்லாயிரம் கணக்கானோர் பட்டு சேலைகளை வாங்கி செல்வர்.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் பட்டு சேலை விற்பனை கடும் சரிவினை சந்தித்துள்ளது. இது குறித்து பட்டுச்சேலை வியாபாரி ஒருவர் கூறும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத நிலையில் கூட்டுறவு சங்கங்களில் அவற்றினை வாங்குவது இல்லை.

பட்டுசேலை வாங்க வருபவர்கள் பல ஆயிரக் கணக்கான ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் பெரும்பாலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாகவே கொண்டு வருகின்றனர். இதனால் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை மிகவும் குறைந்தது.

காஞ்சீபுரத்தின் முன்னணி பட்டு கூட்டுறவு சங்கங்களில் நாள் ஒன்றுக்கு சராசரி விற்பனை 1 கோடிக்கு மேல் இருக்கிறது. தற்போது சராசரி விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் பட்டுசேலைகள் கூட்டுறவு சங்கங்களில் தேக்கம் அடைந்துள்ளது. நெசவாளர்களுக்கும் வேலை அளிப்பு குறைந்துள்ளதால் அவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு கூலியாக இப்போது பணத்திற்கு பதில் காசோலையாக அளிக்கப்படுகிறது. பெரும் பான்மையான நெசவாளர்கள் போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள்.

வங்கி நடைமுறைகள் குறித்து அறியாத அவர்களிடம் நாங்கள் உடனிருந்து பணத்தினை மாற்றி தருகிறோம். எங்களுக்கு குறிப்பிட்ட தொகையை தந்துவிடுங்கள் என்று கூறி சில தரகர்கள் நூதன முறையில் பணம் பறிக்கின்றனர்‘ என்றார்.