உச்சகட்ட காற்று மாசுபாடு அச்சுறுத்தல் ஏற்படும் தருணங்களில், பழைய கார்களுக்கு தடைவிதிக்க சீனா திட்டமிட்டுள்ளது.உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மக்கள் தினசரி இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.
2010-ம் ஆண்டு சீனாவில் நாளொன்றுக்கு காற்றின் மாசுபாடு காரணமாக 1,595 பேர் மரணமடைந்துள்ளனர். சீனா 2005 முதல் 2011 வரை காற்றின் மாசுபாட்டிற்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும்வகையில், பழைய கார்களுக்கு தடைவிதிக்க சீனா திட்டமிட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக புகையை வெளியிடும் 10 வருட பழைய கார்கள் பீஜிங் நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இது அமலுக்கு வருகிறது.
உச்சகட்ட காற்று மாசுபாடு அச்சுறுத்தல் ஏற்படும் தருணங்களில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீஜிங் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் வாகனங்களுக்கு சாலையில் செல்லும் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் 100 யென் அபராதமாக விதிக்கப்படும்.