ஜேம்ஸ் மேத்திஸ் புதிய ராணுவ மந்திரி மற்றும் பெண்டகனின் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக டிரம்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கியமான பதவிகளை வகிக்க இருப்போரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். நியூஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள அவரது கோல்ப் விடுதியில் இதற்கான ஆலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது.
மசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னரும், கடந்த 2012-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருமான மிட் ரோம்னி, ஓய்வு பெற்ற கடற்படை தளபதி ஜேம்ஸ் மேத்திஸ் ஆகியோருடன் கடந்த 19-ந் தேதி டிரம்ப் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் மிட் ரோம்னி புதிய வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஜேம்ஸ் மேத்திஸ் புதிய ராணுவ மந்திரி மற்றும் பெண்டகனின் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக டிரம்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் நேற்று முன்தினம் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் ‘மேத்திஸ் மிகவும் சுவாரஸ்யமானவர்’ என புகழ்ந்து செய்தி வெளியிட்டு இருந்தார்.
66 வயதான மேத்திஸ் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013 வரை அமெரிக்காவின் வெளிநாட்டுப்போர்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அந்தவகையில் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய போர்களை அவர் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.