கடந்த 2011-ம் ஆண்டு பேரழிவை சந்தித்த ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தை இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி பேரலைகள் தாக்கிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகுஷிமா நகரில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சுனாமி எனப்படும் பேரலைகளின் எழுச்சியால் புகுஷிமா அணுஉலையில் இருந்த மூன்று ‘ரியாக்டர்’கள் உருகிப் போயின.
இந்த சுனாமியில் சிக்கிய சுமார் 18 ஆயிரம் பேர் இறந்தும், காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்றுகாலை சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில்) புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடலில் ஆர்ப்பரித்து எழும்பிய பேரலைகள் புகுஷிமா டாய்ச்சி அணு மின்நிலையத்தை தாக்கியதாகவும், இந்த அலைகள் ஒவ்வொன்றும் ஒருமீட்டருக்கும் அதிகமான உயரத்தில் எழுந்து சீறிப்பாய்ந்து வந்ததாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதனால் இங்குள்ள அணு உலைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புகுஷிமா டாய்ச்சி மின் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.இன்றைய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட சேத விபரங்கள் ஏதும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்படலாம் என ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சுனாமி எனப்படும் பேரலைகளின் எழுச்சியால் புகுஷிமா அணுஉலையில் இருந்த மூன்று ‘ரியாக்டர்’கள் உருகியதும், சுமார் 18 ஆயிரம் பேர் இறந்தும், காணாமல் போனதும் நினைவிருக்கலாம்.