புதுச்சேரி சட்டசபைக்குட்பட்ட நெல்லிக்குப்பம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல் மந்திரியுமான நாராயணசாமி 11 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
புதுவையில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நாராயணசாமி முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவர் எம்.எல்.ஏ. ஆவதற்காக நெல்லித் தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் நாராயணசாமி (காங்கிரஸ்), ஓம் சக்தி சேகர்(அ.தி.மு.க.), ஆறுமுகம் என்ற சரவணன்(ஐக்கிய ஜனதா தளம்), ரவிஅண்ணாமலை (நாம் தமிழர் கட்சி), கணேஷ் ஞானசம்பந்தன் (சுயேச்சை), கலியமூர்த்தி (சுயே), சேகர் என்ற ஞான சேகரன் (சுயே), மாசிலா குப்புசாமி (சுயே) என 8 பேர் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
கடந்த 19-ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 85.76 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவுக்கு பின்னர் பலத்த பாதுகாப்புடன் பாரதி தாசன் மகளிர் கல்லூரிக்கு மின்னணு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாகவே முடிவுகள் வெளிவந்தன.
காலை 9.15 மணியளவில் மொத்த வாக்குகள் எண்ணப்பட்டு இறுதிமுடிவு அறிவிக்கப்பட்டது.
நாராயணசாமி 18,707 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 7,526 வாக்குகளையும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 11,143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் புதுச்சேரி முதல்-அமைச்சர் பதவியை முன்னாள் மத்திய மந்திரியான நாராயணசாமி தக்கவைத்துக் கொண்டுள்ளார். புதுவை நகர வீதிகளில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவரது வெற்றியை காங்கிரசார் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்றனர்.