சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாளை (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11.30 மணிக்கு முன்னிலையாகவுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தஅவர், “எமது நாட்டில் தேசிய சொத்துக்கள் பல அரசியல் குழுக்களால் மோசடி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் மொத்த கடன் தொகை 11 டிரில்லியன் என்றும் அதில் 1.8 டிரில்லியன் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் முன்னாள் கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான பணத் தொகை எமது நாட்டிலுள்ள மோசடிக்காரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக நாம் கட்சி ரீதியாக தொடர்ச்சியாக செயற்பட்டுள்ளோம். இவை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுப் பிரிவு, எப்.சி.ஐ.டி. என்பவற்றில் நாம் முறைப்பாடளித்திருக்கின்றோம். முறைப்பாடளித்தது மாத்திரமின்றி அவற்றுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளோம்.
நாம் ரணில் விக்கிரமசிங்க, லக்ஷமன்கிரியெல்ல , மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவர்கள் முன்னிலையிலேயே நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளோம்.
நாடாளுமன்த்தில் மாத்திரமின்றி அதற்கு வெளியிலும் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தற்போது எமக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஊழல், மோசடிக்கு எதிராக போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அந்த அழைப்பை நாம் விரும்பி ஏற்றுக் கொள்கின்றோம்” என குறிப்பிட்டார்.