பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்படட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கான நட்டஈட்டை இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களது பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் இருவரது குடும்பத்தினருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்த போதிலும் தங்களுக்கு நீதியே வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட பெற்றோர் அமைச்சரிடம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்தின் அழைப்பை ஏற்று பல்கலைக்கழகத்திற்கும் விஜயம் செய்தார்.
அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது பெற்றோருக்கும், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இதன்போது சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களினதும் மாணவத் தலைவர்கள், துப்பாக்கிச் சூட்டில் பலியான இரண்டு மாணவர்களினதும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.