கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குடும்ப நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் பரவலை தடுத்து நிறுத்தும் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்கள் நலனை துறந்து மக்களை காக்கும் பணியை முழுமையான ஈடுபாட்டோடு செய்து வருகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு தமிழகமும், த.மா.கா.வும் தலைவணங்குகிறது.
அதேவேளையில் அவர்களில் சிலர் கொரோனா நோய் தொற்றால் பலியாகி வருகிறார்கள் என்ற செய்தி மிகுந்த கவலையையும், துயரத்தையும் அளிக்கிறது.
மக்கள் நலனில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் நலனையும், தங்கள் குடும்பத்தினர் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தங்களுக்கோ, தங்கள் குடும்பத்துக்கோ எந்தவித பாதிப்பும் வராமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.