சென்னையில் 13 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை – 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

245 0

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் ‘பிளாஸ்மா’ சிகிச்சையால் குணமடைந்தனர்.

கொரோனாவில் இருந்து குணம் அடையும் நோயாளிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். எனவே அவர்களுடைய ரத்தத்தை தானமாக பெற்று, அதில் இருந்து புதிய நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ‘பிளாஸ்மா’ ஆகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதியுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிகிச்சைக்கு பலனாக பலர் குணம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் குணம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் டாக்டர் சுபா‌‌ஷ் கூறியதாவது:-

26 கொரோனா நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் 13 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. மற்ற நோயாளிகளை விட அவர்களின் உடல்நிலை மிகவும் வேகமாக முன்னேறியது. தற்போது 6 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் குணமடைந்துவிடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.