சென்னையில் இருந்து கோவை வந்த நகைக்கடை ஊழியர்கள் 3 பேருக்கு கரோனா: கொள்ளைநோய்கள் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு

253 0

சென்னையில் இருந்து கோவை வந்த நகைக்கடை ஊழியர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம், கிராஸ் கட் சாலையில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் சென்னை கிளையிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களை இ-பாஸ் இல்லாமல் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதாரத்துறைக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் அந்த நகைக் கடையில் சோதனையிட்டனர். அப்போது, இ-பாஸ் இல்லாமல் ஊழியர்கள் வந்தது உறுதியானது. இதையடுத்து நகைக்கடையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பின்னர், ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 193 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

கரோனா தொற்று பரவும் வகையில் கூட்டத்தைக் கூட்டியதாக நகைக்கடை மீது அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் அடிப்படையில், கொள்ளைநோய்கள் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.