முழு ஊரடங்கு; சென்னையில் ஒரே நாளில் 4,799 வழக்குகள் பதிவு: 7,907 வாகனங்கள் பறிமுதல்

231 0

முழு ஊரடங்கின் இரண்டாம் நாளான நேற்று சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி வெளியில் சுற்றியதாக 4,799 வழக்குகளும், 7,907 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்:

“கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு (கு.வி.மு.ச) 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 கு.வி.மு.ச.ன் கீழ் தடையை மீறுபவர்களைக் கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரிவு 144 கு.வி.மு.ச-ஐ நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை பெருநகரில் நேற்று (20.06.2020) காலை 6 மணி முதல் இன்று (21.06.2020) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 4,799 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 4,066 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள் மற்றும் 90 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 4,205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 3,329 இருசக்கர வாகனங்கள், 119 ஆட்டோக்கள் மற்றும் 254 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 3,702 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸார், போக்குவரத்து போலீஸார் இணைந்து மொத்தம் 7,395 இருசக்கர வாகனங்கள், 168 ஆட்டோக்கள் மற்றும் 344 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 7,907 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது”.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.