சிறிலங்காவில் CID யின் புதிய இயக்குநர் மீதான லசந்தவின் மகளின் குற்றச்சாட்டு- அறிக்கை கோரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு

221 0

சிறிலங்காவின் குற்றப்பலனாய்வுத் திணைக்களத்தின் புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி, அவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை எழுதியிருந்தார்.

குறித்த கடிதத்தில், தனது தந்தையின் கொலை தொடர்பான ஆதாரங்களை சிஐடியின் இயக்குநர் மறைத்தார் சந்தேகநபர்களை காப்பாற்றினார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து, அவரை கைதுசெய்வதற்கு 2019 இல் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டிருந்தார் என அகிம்சா விக்ரமதுங்க குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும் பின்னர் சிஐடியின் இயக்குநராக அல்விசினை நியமிப்பதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் உதவினார் என அகிம்சா விக்ரமதுங்க குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தாங்கள் அகிம்சா விக்ரமதுங்கவின் கரிசனைகளை கருத்திலெடுத்துள்ளோம் என்றும் பதில் பொலிஸ்மா அதிபரின் பதிலிற்காக காத்திருக்கின்றோம் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிசாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.