மணல்காடு மணல் அகழ்வு விவகாரம்; ஒப்பந்தம் மூலம் தீர்த்து வைப்பு!

269 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மணல் விநியோக முரண்பாடு பருத்தித்துறை பொலிஸார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமது பகுதி வாகனங்களை மணல் விநியோகத்திற்கு இணைத்துக் கொள்ளவில்லை என்பதால் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதி மக்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் நேற்று (17) முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.

அன்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், பிரதேச செயலாளருடன் ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் உரிய தீர்வை தருவதாக தெரிவித்திருந்தால், அன்றைய தினம் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (19) மீண்டும் குடத்தனை பகுதி வாகன உரிமையாளர்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உரிமம் பெற்று அகழ்வு மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் மணல்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தினருடன் ஏற்படுத்திக்கொண்ட கலந்துரையாடலில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த பணிப்புரைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உடன் அமுலாகும் வகையில் மணல் விநியோக அனுமதி வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவருடன் உரையாடும் போது முன்பு போன்றே பிரதேச மக்களுடைய வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது வாகனங்கள் அரைவாசியும், யாழ் மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சங்கப் பார ஊர்திகள் அரைவாசியாக இனிமேல் மணல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனடிப்படையில் அதனை மணல்காடு கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்றுக் கொண்டது. அத்துடன் முன்னர் எவ்வாறு மணல் விநியோகம் இடம்பெற்றதோ அதே போன்று இனிவரும் நாட்களில் மணல் விநியோக நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்று முத்தரப்பும் பூரணமாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் போராட்டம் நிறைவுக்கு வந்திருந்தது.

அத்துடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன் ஆகியோர், மாவட்ட அரச அதிபர், மாகாண பிரதம செயலாளர், கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களம் ஆகியோருடன் ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின் பின்னர் பாரவூர்தி சங்கத்தின் மூலம் வடமராட்சி கிழக்கிற்க்கு உட்பட்ட வாகனங்களுக்கும் பார ஊர்தி சங்கத்தின் வாகனங்களும் சம அளவில் மணல் விநியோகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்வதென்றும், அதறக்காக ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி அதன் பின்னர் மணல் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ் ஒப்பந்தம் மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.