தேர்தல் விதிகளை மீறும் சிறிதரன்

245 0

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகளுக்கமைய வேட்பாளர் ஒருவர் தான் பயணம் செய்யும் வாகனத்தில் விளம்பரப் பதாதைகளை (ஸ்டிக்கர்) காட்சிப்படுத்த முடியும் என்பதுடன் அவ் வாகனத்தில் நிச்சயமாக அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்ப்பாளருமான சிறீதரனின் படம், கட்சி சின்னம், விருப்பிலக்கம் ஆகிய பதாதைகளை தாங்கியவாறு வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வாகனம் ஒன்று பயணித்துள்ளது.

வேட்பாளர் இன்றி பயணித்த குறித்த வாகனத்தை புளியங்குளம் பொலிஸார் மறித்து பதாதைகளை நீக்கி விட்டு அனுப்பியுள்ளனர்.

ஆனால் குறித்த வாகனம் பல நாட்களாக வேட்பாளர் இன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் பயணம் செய்த போதும் கிளிநொச்சி பொலிஸார் இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் வினவுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை தமிழசுக் கட்சியின் தலைமையை கைப்பற்றும் நோக்கில் இருக்கும் சிறிதரன் கட்சிக்குள்ளும் மக்களிடமும் வெறுப்புக்குள்ளாகியுள்ள சுமந்திரனை அதிரடிப்படை பாதுகாப்புடன் நேற்று நெடுந்தீவுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கலந்து கொண்டிருந்தது குறிப்பித்தக்கது.