பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கொள்கை ரீதியிலான திட்டங்களை ஜனாதிபதி வகுக்கவேண்டும் – வேலுகுமார்

283 0

மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதைவிடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கொள்கை ரீதியிலான திட்டங்களை ஜனாதிபதி வகுக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ நாட்டில் நிதி அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவ்வமைச்சுக்கு செயலாளர் ஒருவர் இருக்கின்றார். வங்கிகளின் வங்கியாகக் கருதப்படுகின்ற மத்திய வங்கிக்கு ஆளுநர் ஒருவரும் இருக்கின்றார்.

இவர்கள் மூவருமே பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டியவர்கள். இவர்களுக்கான நியமனத்தை ஜனாதிபதியே வழங்கினார்.எனவே, இவர்களைவிடுத்து மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து , பிரசாரத்துக்காக அவர்களை மிரட்டுவது ஜனாதிபதியொருவர் செய்யக்கூடி பணி அல்ல.

அமைச்சரவையில் இவ்வாறு பொங்கியெழுந்து நிதி அமைச்சரிடம் ஜனாதிபதி தனது விசனத்தை வெளியிட்டிருந்தால் அதனை வரவேற்றிருக்கலாம்.

ஆனால், அரசாங்க அதிகாரிகளை இவ்வாறு மிரட்டுவது தவறான முன்னுதாரணத்தை வழங்கும் செயலாகும். ஜனாதிபதியாக இருந்தாலும் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படவேண்டும்.

நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அரச அதிகாரிகள் தவறான முடிவுகளை எடுத்தால் , நாடாளுமன்றம் இல்லாத நிலையில் பொறுப்புக்கூறவேண்டியது யார்?

எனவே, மிரட்டல்கள், எச்சரிக்கைகள் அல்ல, கொள்கை ரீதியிலான திட்டங்களே அவசியம். எட்டு மாதங்கள் ஆகியும் ஜனாதிபதி இதனை உரிய வகையில் செய்ததாக தெரியவில்லை. இராணுவ அதிகாரிகளை நியமித்து செயலணிகளை அமைத்தால் மட்டும் பிரச்சினைகளை தீர்ந்துவிடாது.” என குறிப்பிட்டார்.