ஆட்சியாளர்கள் முட்டாள்களாக இருப்பதாலேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றது!

340 0

mano-ganesan-12-e1422437623388நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ஜானகி விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாததாலேயே மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. போர்க்குற்றம், அரசியல் படுகொலைகள், சட்டவிரோத கொலைகள், மனிதக் கடத்தல்கள், காணாமலாக்குவது அனைத்துமே நேரடியாகவோ மறைமுகமாகவோ நடந்தேறியிருப்பதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருப்பதுதான் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் தேசிய இனப்பிரச்சினையோடு சம்பந்தமில்லாமல் நடக்கும் குற்றச்செயல்கள், ஒரு ஐந்து வீதமாகத்தான் இருக்கும்.

யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலைக் கோரியிருக்கும் அதேவேளை, இனப்பிரச்சனைக்கான தீர்வையும் வலியுறுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது.பொறுப்புக் கூறலை மாத்திரம் நாம் வலியுறுத்திக் கொண்டு ஒருபக்கமாகச் செல்வோமானால் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வென்பது எட்டாக்கனியாகி விடும். அப்படி நடந்தால் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெற ஆரம்பித்து விடும்.ஆகவே பொறுப்புக்கூறல் கோரிக்கை மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வலியுறுத்தல் இரண்டையும் சமாந்தரமாகக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்குண்டு.

இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு சாணக்கியமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எமது தீர்வைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடைய வழி எனவும் தெரிவித்துள்ளார்.