சம்பந்தனுக்கு பழைய வாகனம் – நாடாளுமன்றத்தில் இன்று

297 0

parliamentஎதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அவருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளுக்கான வாகனம், பல வருடங்கள் பழமையானது என்றும், இதற்கு ஏனைய வாகனங்களுடன் வேகத்தில் இசைந்து செல்ல முடியாதிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதில் வழங்கிய சட்ட ஒழுங்குகள் அமைச்சர், தமக்கும் அவ்வாறான வாகனம் ஒன்றே வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.

எனினும் இந்த விடயம் குறித்து தாம் அவதானம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் குழுநிலை விவாதம் இன்று நடைபெற்றிருந்தது.

இன்றைய விவாதத்தில் உரையாற்றிய ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தற்போதைய அரசாங்கம் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.

கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்கள் புதிய தலைவர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்டது.

ஆனால் 2015ஆம் ஆண்டும் மிகவும் மோசடிகள் நிறைந்ததலைவர் ஒருவரை நீக்குவதற்காக இடம்பெற்றது.

இதன்காரணமாகவே ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள்.

புதிய ஆட்சி ஊழல்களை இல்லாது செய்து, கடந்த கால ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும் என்ற ஆணையை மக்கள் வழங்கினார்கள்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை.

ஊழல்களுக்கு எதிரான விசாரணைகள் மந்த நிலையிலேயே இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் குற்றச்சாட்டுகளின் பிணை அனுமதி பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் நீதி சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், காவற்துறையினரையும் நீதிமன்றத்தையும் அரசாங்கம் மகிந்த அணியினரை பழிவாங்குவதற்காக பயன்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அழுத்கமகே குற்றம் சுமத்தினார்.

தங்களுக்கு எதராக அநாவசியமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை உருவாகி இருந்தது.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மகிந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் கோப் குழு அறிக்கையின் விபரங்கள் விரைவில் வெளியாக்கப்படும் என்று தெரிவித்தார்.