அமெரிக்காவில் கருப்பரினத்தைச் சேர்ந்த இன்னொரு நபரை போலீஸார் சுட்டுக் கொலை: உணவு விடுதிக்கு தீ வைப்பு

277 0

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் காவலில் பலியானதையடுத்து எழுந்த போராட்டங்கள் அடங்காத நிலையில் மேலும் ஒரு கருப்பரினத்தைச் சேர்ந்த நபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அட்லாண்டா போலீஸ் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

27 வயது ரேய்ஷர்ட் புரூக்ஸ் என்ற கருப்பரினத்தைச் சேர்ந்த நபரைக் கைது செய்யும் போது போலீஸாரிடமமிருந்து டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடியதாகவும் இதனையடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்லாண்டாவில் உள்ள, புரூக்ஸ் என்ற இந்த நபர் சுடப்பட்ட இடத்தில் உள்ள வெண்டி உணவு விடுதியை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். நெடுஞ்சாலையில் போக்குவரத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.

இதனையடுத்து அட்லாண்டா போலீஸ் உயரதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.

புரூக்ஸை சுட்டுக்கொன்ற அந்த அடையாளம் தெரியாத போலீஸ் ஆபீசர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக மேயர் அறிவித்தார்.

அட்லாண்டா தலைமை போலீஸ் அதிகாரி ராஜினாமா செய்ததையடுத்து இடைக்கால தலைமை அதிகாரியாக ரோட்னி பைரண்ட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவு விடுதியில் கார்கள் நிறுத்துமிடத்தில் ரேஷர்ட் புரூக்ஸ் என்ற நபர் காரிலேயே தூங்கியுள்ளார். இதனையடுத்து மற்ற வாடிக்கையாளர்கள் வருகையை அவர் வேண்டுமென்றே தடுக்கிறார் என்பதாக போலீஸாருக்கு சிலர் புகார் அளித்தனர்.

அவர் மதுபானம் அருந்தியிருந்ததாக சோதனையில் தெரிய வந்தது. இவரைப் போலீஸார் கைது செய்த முயற்சித்த போது போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இதில் ஆபீசர் ஒருவரின் டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்தியுள்ளனர், ஆனால் அவர் துப்பாக்கியை போலீஸை நோக்கிக் காட்டி அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரைச் சுட்டுக் கொன்றதாக ஜார்ஜியா விசாரணை கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புரூக்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது.

கொல்லப்பட்ட புரூக்ஸ் 4 குழந்தைகளுக்கு தந்தை. மகளின் 8வது பிறந்த தினத்தை வெள்ளிக்கிழமை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இவரது கொலை இன்னொரு பெரிய போராட்டத்தை அங்கு உருவாக்கியுள்ளது.