பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 14) வெளியிட்ட அறிக்கை:
“உலகளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் கூட கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்றது. குறிப்பாக நடுதரத்து மக்களை அதிகம் பாதிக்கின்றது.
இதுவே மறைமுக சரக்கு கட்டணம், மறைமுக விலைவாசி உயர்வு போன்றவற்றின் மூலம் விலைவாசி உயர்வுக்கு காரணமாகிவிடக் கூடாது. கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலவகையில் இன்னலுக்கு ஆளான மக்களுக்கு மேலும் சிரமத்தை அளிப்பதாக அமைந்துவிடக் கூடாது.
ஆகவே, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்தி அதனை கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு ஏதுவாக நிர்ணயம் செய்யக்கூடிய உறுதியான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.