போலி இ-பாஸ் மூலம் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு வரும் வாகனங்கள் அதிரடி சோதனை

238 0

சென்னையில் அதிகரிக்கும் கரோனா தொற்றினால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு போலி இ-பாஸ் மூலம் வரத்தொடங்கியுள்ளனர் என ‘வாகனப்பதிவெண் உதவியுடன் போலி இ-பாஸ் கண்டறிய நடவடிக்கை’ என்ற தலைப்பில் நேற்று (ஜூன் 13) ‘இந்து தமிழ்’ செய்தி வெளியிட்டது.

இச்செய்தி நேற்று முற்பகல் ‘இந்து தமிழ்’ இணையத்திலும் வெளியானது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி, திருமழிசை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு இ- பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பினார்கள்.

மேலும் இ-பாஸ் வைத்திருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று அறிகுறி உள்ளவர்கள், அந்தந்த மாவட்ட எல்லையில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட எல்லையான திண்டிவனம், மயிலம் பகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் அந்தந்த மாவட்ட போலீஸார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு இ-பாஸ் இல்லாதவர்களை புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பி வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், குமரி மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து போலி இ-பாஸ் மூலம் வந்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, சென்னையிலிருந்து இருசக்கர வாகனம் மூலம் சேலம் வந்த தம்பதியினர் மீது சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.