இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.
ஏற்கனவே லடாக், சிக்கிம் உள்ளிட்ட எல்லை பகுதியில் சீனா இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. இப்போது நேபாளமும் தன் பங்குக்கு இந்தியாவுக்கு இடையூறு செய்ய ஆரம்பித்து இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகள் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா. இந்த பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்சுலாவையும் லிபுலேக் பகுதிகையும் இணைக்கும் 80 கி.மீ. சாலையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சமீபத்தில் திறந்து வைத்தார்.
இந்த சாலை தங்கள் எல்லைக்குள் வருவதாக குற்றம்சாட்டிய நேபாளம், சாலையை திறந்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து இந்தியா விளக்கம் அளித்த போதிலும் நேபாள அரசு அதை ஏற்கும் மனநிலையில் இல்லை.
இந்த நிலையில், இந்தியாவின் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை அந்த நாட்டு அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதை வன்மையாக கண்டித்துள்ள இந்தியா, நேபாளத்தின் புதிய வரைபடம் தன்னிச்சையானது என்றும், அதற்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது என்றும் கூறி இருக்கிறது.
ஆனால் தாங்கள் தயாரித்துள்ள புதிய வரைபடம் சரியானதுதான் என்றும், இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கடந்த நவம்பர் மாதம் முதலே இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நேபாள அரசு கூறி உள்ளது. இந்த விவகாரம் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்திய-நேபாள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தின் சீதாமார்கி மாவட்டத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள பன்டிஜங்கி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நேபாள ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் பலி ஆனார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். ஒருவரை அவர்கள் பிடித்துச் சென்றனர்.
நேபாளத்தின் இந்த செயல் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேபாள அரசின் செயல்பாடுகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கிருந்து நேபாளத்துக்கு தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த சப்ளை தொடரும் என்று நேபாள அரசுக்கு இந்தியா உறுதி அளித்து இருக்கிறது. என்றாலும் நேபாள அரசு இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடிக்கிறது.
3 இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் நேபாள அரசு திருத்தம் செய்தது. இதற்கு ஒப்புதலை பெறுவதற்காக நேபாள அரசு நேற்று நாடாளுமன்றத்தை கூட்டியது.
நாடாளுமன்ற கீழ்சபை கூட்டத்தில் அரசியல் சாசன திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா (நேபாளம்), ராஷ்ட்ரீய பிரஜாதந்திரா ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகளும் மசோதாவை ஆதரித்தன.
இந்த மசோதா பின்னர் மேல்-சபையில் (தேசிய அசெம்ப்ளி) நிறைவேறியதும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்படும்.
நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு ஆதரவாக அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த செயற்கையான பரவலாக்கம் எந்தவித வரலாற்று உண்மையையோ, ஆதாரத்தையோ அடிப்படையாக கொண்டது அல்ல. இதை ஏற்க முடியாது. இது எல்லை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தற்போதைய புரிந்துணர்வுக்கு எதிரானது’ என்று தெரிவித்தார்.