பொதுத் தேர்தலுக்கான மாதிரி வாக்கெடுப்பு இன்று யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் சில இடங்களில் நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகத நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலை சுகாதார வழிகாட்டு முறைகளின் கீழ் நடத்துவதில் உள்ள சிரமங்களைக் கண்டறிவதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு மாதிரி வாக்கெடுப்புகளை நடத்தி வருகின்றது. முதல் கட்டமாக அம்பலாங்கொடையில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று, மொனராகலை மாவட்டம் வெள்ளவாயவிலும், பொலனறுவை மாவட்டம் திம்புலாகலவிலும், மாத்தளை மாவட்டம் ரத்தோட்டவிலும், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியிலும், மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸவிலும், கம்பகா மாவட்டம் நீர்கொழும்பிலும், கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு வடக்கு மற்றும் தெமட்டகொடவிலும், மாதிரி வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், இன்று யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அப்புத்தளை, நுவரெலியா, ஹொரவப்பொத்தானை, கொழும்பு, கஹதுடுவ ஆகிய இடங்களில் மாதிரி வாக்கெடுப்புகள் நடத்தப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.