நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது என தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலருக்கு தனது கொள்கைகள் பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
சண்டே டைம்சிற்கு அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை பின்பற்ற முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த அரசியல் பயணத்திலும் தோல்வி சாத்தியம்,நான் எனது அரசியல் வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் பல தோல்விகளை சந்தித்திருக்கின்றேன்,ஆனால் தோல்வியை கண்டு ஒருபோதும் நான் தப்பியோடியதில்லை.
தோல்வியை நான் எப்போதும் வெற்றிக்கான படிக்கல்லாக பயன்படுத்தியிருக்கின்றேன்.1988 முதல் நான் அனைத்து நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்றிருக்கின்றேன்.ரொனிடிமெலிற்கு பின்னர் அவ்வாறான சாதனையை கொண்ட நிதியமைச்சர் நான் மாத்திரமே.
நான் பல வருடங்களாக மிகப்பெருமளவு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.2004 இல் 118,000 வாக்குகள் என்ற எனது சாதனையை என்னால் இம்முறை முறியடித்திருக்க முடியும் என நான் கருதுகின்றேன்.
நாடாளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாகிவிட்டது
எனினும் முழு அமைப்புமுறையும் முற்றாக சிதைவடைந்துவிட்டது என நான் கருதுகின்றேன். பாராளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது.
நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் நிலையில்,ஆழமாக பிளவுபட்டுள்ள எதிர்கட்சிகள் அடையாளத்திற்கான நெருக்கடியில் சிக்கியுள்ளநிலையில்,இன்றைய நாளின் கடும் நெருக்கடிகளான, பொருளாதாரம் கடும் குழப்பத்தில் உள்ளமை,இராணுவமயமாக்கலின் ஆரம்பத்தில் ஜனநாயகம் காணப்படுகின்றமை,கோத்தபாய ராஜபக்சவினால் வெளிப்படையாக ஆதரிக்கப்படும் பெரும்பான்மை வாதம் போன்ற பிரச்சினைகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர், அலட்சியம் செய்கின்றனர்,
இன்றைய சூழலில் ஒரு சிவில் சமூகமாக நாங்கள் மிக முக்கியமானதாக கருதும் ஜனநாயகத்திற்கான போராட்டம் மற்றும் ஏனைய விழுமியங்களிற்கான போராட்டங்களை நாடாளுமன்றத்தில் மாத்திரம் முன்னெடுக்க முடியாது.
இந்த போராட்டங்களை சைபர் வெளியிலும் இலங்கையின் நகரங்களிலும் கிராமங்களிலும் முன்னெடுக்கவேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலருக்கு எனது கொள்கைகள் பிடிக்கவில்லை
சஜித் பிரேமதாச நேர்மையான திறமையா ஒரு அரசியல் தலைவர்.
அவரது அமைச்சிற்கு நிதி ஒதுக்குவது எப்போதும் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விடயம் ஏனென்றால் அந்த நிதி சிறப்பான பயனுள்ள வகையில் செலவிடப்படும் என்பது எனக்கு எப்போதும் தெரியும்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலருக்கு எனது தாரளவாத கருத்துக்கள் பிடிக்கவில்லை.
அவர்கள் ஐக்கியதேசிய கட்சியின் வேர்களை அடிப்படையாக கொண்ட தனித்துவமான அடையாளத்தை பேணுவதற்கு பதில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை பின்பற்ற முயல்கின்றனர்
ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் குறித்து
மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வந்தவுடன் சுதந்திரக்கட்சி அதன் பாராம்பரிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலக தொடங்கியது இதன் காரணமாகவே நான் 2008 இல் கட்சியிலிருந்து வெளியேறினேன்.
அதன் பின்னர் நான் ஐக்கியதேசிய கட்சியுடனும் அதன் தலைவர் ரணில் விக்;கிரமசிங்கவுடனும் இணைந்து பணியாற்றினேன்- குறிப்பாக அவருடைய தாராளாவாத குணாதிசயங்கள் காரணமாக.
ஐக்கியதேசிய கட்சி துரதிஸ்டவசமான விதத்தில் பிளவுபட்டுள்ள போதிலும் அதன் அடிப்படை கொள்கைகள் பொருத்தமானவை என நான் கருதுகின்றேன்.
துரதிஸ்டவசமாக ஐக்கியதேசிய கட்சியும் அடையாள நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. நான் இது 1956 இல் சேர் ஜோன் கொத்தலாவலையின் தோல்விக்கு பின்னர் ஆரம்பமாகிவிட்டது என கருதுகின்றேன்,அவருடைய காலத்திலேயே கட்சியின் கொள்கைகள் உயர்நிலையில் காணப்பட்டன,பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது,எங்களின் வெளிவிவகார உறவுகள் சிறந்த நிலையில் காணப்பட்டன.
இதன் பின்னர் ஐக்கியதேசிய கட்சியின் மதச்சார்பற்ற மனோபாவம் காணாமல்போயுள்ளது,எஸ்டபில்யூ பண்டாரநாயக்க கட்டவிழ்த்து விட்ட மனோபாவம் ஆக்கிரமித்துள்ளது.
ஜேஆர் ஜெயவர்த்தனவும், சந்திரிகா குமாரதுங்கவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது வெற்றியடையவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்க கூடாது என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை,நான் அவரை முகத்திற்கு நேரே பல முறை விமர்சித்துள்ளேன்,அவரிற்கு மக்கள் ஜனரஞ்சகம் இல்லாத போதிலும்,ஐக்கியதேசிய கட்சியில் ஜனநாயக ரீதியிலான பார்வை கொண்ட ஒரேயொரு தலைவர் அவரே என நான் கருதுகின்றேன்.
எனது இதயத்தில் என்றும் ஐக்கிதேசிய கட்சியே
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராகயிருப்பது என்பதன் அர்த்தம் அதன் உறுப்பினர் அட்டையை வைத்திருப்பதோ அல்லது செயற்குழுவில் இடம்பெற்றிருப்பதோ இல்லை,
நான் எனது இதயத்தில் எப்போதும் ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்தவனே,நான் பிரதிநிதித்துவம் செய்யும் தாராள விழுமியங்களிற்காக போராடுவேன்