முகமாலையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்!

262 0

முகமாலை, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) குறித்த பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றதுடன் தமது பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும், புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் கிடைக்கவில்லை எனவும் கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் பாடசாலை வளங்கள் களவாடப்பட்டமை தொடர்பாக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், முதலாம் வருட மாணவர்களுக்கான சீருடை பௌச்சர்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

தரம் 5 வரை வகுப்புக்கள் உள்ள குறித்த பாடசாலையில் 30 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு  இறுதியாக ஆரம்பிக்கப்பட் குறித்த பாடசாலைக்கான கற்றல் கற்பித்தலிற்கான வளங்கள் பெற்றுக்கொடுக்காமை தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.