சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறி உள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன. தொடர்ந்து படைப்பிரிவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. சீன தரப்புடன் தொடர்ச்சியான உயர் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் மூலம், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 10-15 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவை எல்லாம், ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மிக நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு காரணமாகவே நடந்துள்ளது.
பெரும்பாலான நடவடிக்கைகள் உள்ளூர் மக்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. போர்க்குணம் மற்றும் பயங்கரவாதத்தால் மக்கள் முற்றிலும் வெறுத்துப் போயிருப்பதையே இது காட்டுகிறது. மேலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.