அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு சர்வதேச விருது

305 0

சிறு விவசாயிகளுக்கு விளைச்சலை பெருக்க உதவியதற்காக அமெரிக்காவின் ஓகியோ உணவு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரத்தன் லாலுக்கு 2020-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ உணவு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரத்தன் லால். பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இவர் மண் ஆய்வுத்துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார்.

இவரது ஆய்வு மூலம் மண்வளம் பெருகி சிறு விவசாயிகளுக்கு விளைச்சலை பெருக்க உதவியதற்காக ரத்தன் லாலுக்கு 2020-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயத்துறையின் நோபல் பரிசாக கருதப்படும் இந்த விருதுடன் 2.50 லட்சம் டாலர் (ரூ1.80 கோடி) தொகையும் வழங்கப்படுகிறது.

மண் ஆய்வுகள் மூலம் உணவு உற்பத்தியை பெருக்கியது மட்டுமின்றி இயற்கை வளங்களை பாதுகாத்து, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தியமைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருது வழங்கும் அமெரிக்க அறக்கட்டளை அறிவித்து உள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள ரத்தன் லால், இந்த விருது மூலம் மண் அறிவியல் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் தனது பரிசு தொகையை எதிர்கால ஆய்வு திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.